×

அடடா... ஒமைக்ரானால் இவ்ளோ நன்மையா? - ஐசிஎம்ஆரின் ஆச்சர்ய ஆய்வு... ரிப்போர்ட் இதோ!

 

உலக சுகாதார அமைப்பு ஒமைக்ரான் கொரோனாவை கவலையளிக்கக் கூடிய வைரஸாக வகைப்படுத்தியுள்ளது. உலக நாடுகளை தயார் நிலையில் இருக்குமாறு கேட்டுக்கொண்டது. அதன்பேரில் ஒமைக்ரான் பரவல் அதிகமாக இருந்த நாடுகளுடனான விமான சேவையை பல்வேறு நாடுகள் துண்டித்துக் கொண்டன. மற்ற நாட்டு பயணிகளுக்கு கட்டாய ஆர்டிபிசிஆர் சோதனை, கட்டாய வீட்டு தனிமை என அதிக கெடுபிடிகள் விதிக்கப்பட்டன. ஆனால் இந்தளவுக்கெல்லாம் ஒமைக்ரான் வொர்த்தே இல்லை என அதனை முதன்முதலாக கண்டறிந்த தென்னாப்பிரிக்க மருத்துவர் ஏஞ்சலிக் கோட்ஸி கூறினார்.

அவர் சொன்னது போலவே பெரிய பாதிப்பை ஒமைக்ரான் ஏற்படுத்தவில்லை. இதற்கு இரு காரணங்கள் கூறப்பட்டன. ஒன்று பெரும்பான்மையான மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியது. ஒமைக்ரான் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களை தாக்கினாலும் கூட மூன்று நாட்களில் ஓடிவிடுகிறது. டெல்டா கொரோனா பரவலின்போது மருத்துவமனைகள் நிரம்பிவழிந்தன. ஆக்சிஜன் இல்லாமல் மக்கள் அல்லல்பட்டனர். ஒட்டுமொத்த சுகாதார கட்டமைப்பே ஆட்டம் கண்டது. ஆனால் இதில் எதுவுமே ஒமைக்ரானால் நிகழவில்லை. இந்தியா மட்டுமல்ல பெரும்பாலன நாடுகளிலும் நிலவரம் இதுதான்.

மற்றொரு காரணம் ஒமைக்ரான் உருமாறும்போது ஜீனில் ஏற்பட்ட ஏதோ ஒரு குளறுபடி தான் அதன் தீவிரத்தைக் குறைத்திருக்க கூடும் என்கிறார்கள். மின்னல் வேகத்தில் பரவினாலும் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாதற்கு காரணம் இதுதான் என்று சொல்கிறார்கள். ஆகவே இது நமக்கு கிடைக்கு புது வருட கிப்ட் என முன்னமே ஆராய்ச்சியாளர்கள் கூறியிருந்தார்கள். உலகம் முழுவதும் ஒமைக்ரான் பரவி நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கிவிட்டு செல்லும். அதற்குப் பின் பெருந்தொற்று (Pandemic) என்ற நிலையிலிருந்து பருவ நோயாக (Endemic) மாறும் எனவும் தெரிவித்தார்கள். அதாவது சீசனுக்கு பரவும் தொற்று.

இவ்வாறு பல்வேறு கருத்துகள் கூறப்படும் இவ்வேளையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகமான ஐசிஎம்ஆர் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவு கூடுதல் பூஸ்ட்டை கொடுக்கிறது. ஆம் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு குணமடைபவர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி (ஆன்டிபாடி) உருவாகிறது. இந்த ஆன்டிபாடி ஒமைக்ரான் மட்டுமின்றி டெல்டா உள்ளிட்ட கவலையளிக்கக் கூடிய (Variant Of Concern) மற்ற கொரோனா வகைகளையும் அழிக்கும் திறன் கொண்டுள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதன் காரணமாக  கொரோனாவிலிருந்து மீண்ட நபர்களை மீண்டும் டெல்டா தாக்கும் வாய்ப்புகள் குறைவு எனவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.