×

"தடுப்பூசிக்கு 'நோ' சொல்லும் மாணவர்களுக்கு கெட் அவுட்" - அரசு எச்சரிக்கை! 

 

உலக நாடுகள் 12 வயதுக்கு மேற்பட்ட சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொண்டிருந்தன. ஆனால் இந்தியாவில் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் குழந்தைகளுக்கு எப்போது தான் தடுப்பூசி கிடைக்கும் என இந்திய பெற்றோர்கள் ஏங்கி கொண்டிருந்தனர். அந்த ஏக்கத்தை பிரதமர் மோடி இறக்கி வைத்தார். கடந்த டிசம்பர் 25ஆம் தேதி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அவர், சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த அனுமதி கொடுத்திருப்பதாக அறிவித்தார். 

ஜனவரி 3ஆம் தேதி முதல் 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் எனவும் தெரிவித்திருந்தார். சிறுவர்களுக்கு கோவாக்சின் மட்டுமே செலுத்தப்படும். கோவிஷீல்டுக்கு அனுமதி கொடுக்கவில்லை. அதேபோல ஜனவரி 1ஆம் தேதி முதல் கோவின் (COWIN) வலைதளத்தில் முன்பதிவு செய்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என மத்திய அரசு தெரிவித்திருந்தது. குறிப்பாக பள்ளி ஐடி கார்டு மூலம் முன்பதிவு செய்யலாம் எனவும் கூறியது. சிலரிடம் ஆதார் போன்ற அடையாள அட்டைகள் இல்லாமல் இருக்கலாம் என்பதால் இதன் மூலம் பதிவுசெய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டன. 

இதையே காரணமாக வைத்து பள்ளிகளிலேயே மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் பல்வேறு மாநில அரசுகள் தீர்மானித்தன. அந்த வகையில் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் பள்ளிகளிலேயே 15 முதல் 18 வயது மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 75 சதவீதத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு முதல் டோஸ் செலுத்தப்பட்டுவிட்டது. புதுச்சேரியிலும் சிறார்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இச்சூழலில் ஹரியான அரசு மிக முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.


இதனை அம்மாநில சுகாதார துறை அமைச்சர் அனில் விஜ் ட்விட்டரில் அறிவித்துள்ளார். அந்த ட்வீட்டில், " தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத 15 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறார்கள் எவரும் பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும்போது அவர்கள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். கோவிட்-19 தொற்றிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்த முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” என்று குறிப்பிட்டிருக்கிறார். ஹரியானாவில் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட சிறார்கள் (15-18 வயது) தடுப்பூசி செலுத்துவதற்கான தகுதியை பெற்றுள்ளார்கள் என்பது கவனிக்கத்தக்கது.