×

"ஏழுமலையானை இவர்கள் தரிசிக்க முடியாது" - திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு!
 

 

கொரோனா பரவல் காரணமாக கடந்தாண்டு மார்ச் மாதம் முதல் திருமலை திருப்பதியில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. கொரோனா பரவல் குறைந்த பின் மீண்டும் அனுமதிக்கப்பட்டது. ஆனால் முன்பை விட கொரோனா வேகமாகப் பரவியதால் மீண்டும் ரத்து செய்யப்பட்டது. கொரோனா இரண்டாம் அலை பரவல் குறைந்ததால் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என தேவஸ்தானம் அறிவித்தது. இப்போது 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே தரிசனம் செய்து வருகிறார்கள்.

அதேபோல தரிசனத்துக்கு மூன்று நாட்கள் முன்பாக கொரோனா நெகட்டிவ் டெஸ்ட் எடுத்தவர்களும் தரிசனம் செய்யலாம் என தேவஸ்தானம் கூறியது. அனைவருக்கும் அனுமதி கொடுத்தாலும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள்,  5 வயதுக்குட்பட்ட கைக்குழந்தையுடன் வரும் பெற்றோர்கள் ஆகியோருக்கு தடை நீட்டிக்கப்பட்டுள்ளது. இச்சூழலில் இவர்களும் தரிசிக்கலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவியது. தற்போது இதை மறுத்து தேவஸ்தானம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில், சமூக வலைத்தளங்களில் வரும் தகவல்களை பக்தர்கள் நம்ப வேண்டாம் என்றும், கொரோனா முற்றிலுமாக குறைந்தால்தான், மீண்டும் மேற்கூறிய சிறப்பு தரிசன முறை அமல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது, விஐபி பிரேக் தரிசனங்கள், ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசனம், ரூ.300 சிறப்பு ஆன்லைன் தரிசனம் மற்றும் ஆன்லைனில் இலவச தரிசனம் என தினமும் சுமார் 30 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். முன்பதிவு செய்யாமல் வரும் பக்தர்கள் அலிபிரி சோதனைச் சாவடியிலிருந்து திருப்பி அனுப்பப்படுகின்றனர்.