×

அடுத்த ஆபத்து... ஆப்பிரிக்காவில் பரவும் புதிய கொரோனா - இந்தியாவில் எத்தனை கேஸ்கள்?

 

லேசான பாதிப்பை உருவாக்கும் வைரஸ்கள் முதல் உயிரைக் காவு வாங்கும் வைரஸ்கள் வரை அனைத்தின் இயல்பே அடிக்கடி உருமாறுவது தான். அவ்வாறு உருமாறும்போது சில வைரஸ்கள் அதிக வீரியத்துடன் பரவும்; ஆனால் குறைவான தீவிரத்தைக் கொண்டிருக்கும். இன்னும் சில உருமாற்றமடைந்த வைரஸ்கள் குறைவான பரவல் விகிதத்தைக் கொண்டிருக்கும் அதிக பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும். இது இல்லாமல் வேறு சில வகையிலும் வைரஸ்களின் தன்மை இருக்கும். 

அதற்கு கொரோனா வைரஸும் விதிவிலக்கல்ல. முதலில் தோன்றிய வைரஸை விட உருமாற்றமடைந்த கொரோனா தான் அச்சுறுத்தலாக உள்ளது. உதாரணமாக ஆல்பா, காமா, கப்பா, டெல்டா என பல்வேறு நாடுகளில் கொரோனா உருமாற்றமடைந்தது. இதில் இந்தியாவில் உருமாறிய டெல்டா வைரஸ் தான்  கொடூரமானது. ஏனென்றால் சாதாரண கொரோனாவை விட 50% வேகமாகப் பரவக் கூடிய தன்மை கொண்டது. இந்தியாவை இரண்டாம் அலை உலுக்கியதற்குக் காரணமே இந்த டெல்டா தான். 

டெல்டா கொரோனா பிரிட்டன், சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதியாகி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. சமீபத்தில் டெல்டாவிலிருந்து உருமாறி AY 4.2 என்ற உருமாற்றமடைந்த புதிய வகை கொரோனா பரவிவந்தது. இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் தென் ஆப்பிரிக்காவில் பி.1.1.529 என்ற புதிய உருமாற்றமடைந்த கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது வேகமாகப் பரவும் அபாயகரமான வைரஸாக வகைப்படுத்துள்ளது. 100க்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியவர்களும் இதில் அடக்கம்.

அதேபோல அண்டை நாடுகளான நமிபியா, ஜிம்பாப்வே, போட்ஸ்வானா, லெசோதோ உள்ளிட்ட நாடுகளிலும் பரவியுள்ளது. இதனால் இந்த நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு சிங்கப்பூர் நாடு தடை விதித்துள்ளது. இந்த வைரஸால் இந்தியாவில் இதுவரை யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மக்கள் யாரும் அச்சப்படாமல் கொரோனா தடுப்பு வழிமுறைகளை வழக்கம் போல கடைப்பிடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.