×

”புதிய திவால் சட்டத்திருத்த மசோதா 2020” – மாநிலங்களவையில் நிறைவேறியது !

பொது முடக்கம் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்ட ஐபிசி எனும் புதிய திவால் சட்டத்திருத்த மசோதா 2020 மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது. வங்கிகளில் பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாத போது அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து அதை விற்று அந்த கடனை வசூல் செய்ய வங்கிகள்
 

பொது முடக்கம் காரணமாக வங்கிகளில் கடன் பெற்று திருப்பி செலுத்த முடியாமல் தவிக்கும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுக்க விலக்கு அளிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட்ட ஐபிசி எனும் புதிய திவால் சட்டத்திருத்த மசோதா 2020 மாநிலங்களவையில் இன்று நிறைவேற்றப்பட்டது.

வங்கிகளில் பெரு நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற்று அதை திருப்பி செலுத்தாத போது அவர்களின் சொத்துக்களை ஜப்தி செய்து அதை விற்று அந்த கடனை வசூல் செய்ய வங்கிகள் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதற்கு வசதியாக ஐபிசி எனப்படும் திவால் சட்ட மசோதா ஏற்கனவே 2016ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தின் படி கடன் அளித்த நபர் அல்லது வங்கிகள், கடன் வாங்கிய தனிநபரின் மீதோ அல்லது நிறுவனத்தின் மீதோ தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் திவால் நடவடிக்கையை மேற்கொள்ள முறையிடலாம். பின்னர் தீர்ப்பாயத்தின் உத்தரவை பின்பற்றி நிறுவனங்கள் அல்லது தனிநபர்களின் சொத்துக்களை கைப்பற்றி, அதனை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகையில் அந்த கடன் தொகையை வங்கிகள் ஈடு செய்துகொள்ளும்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு பல தொழில் நிறுவனங்கள் முடங்கின. இதனால் இந்த காலக்கட்டத்தில் வாங்கிய கடனை திருப்ப செலுத்தாத நிறுவனங்களை இச்சட்டத்தின் கீழ் சொத்துக்கள் ஜப்தி மற்றும் ஏல நடவடிக்கையை மேற்கொள்வதில் இருந்து விலக்கு அளிக்கும் வகையில் ஐபிசி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதன்படி, கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஆறு மாதங்களுக்கு அல்லது மேலும் எத்தனை காலத்திற்கு பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறதோ அந்த காலக்கட்டத்தில், கடனை பெற்று திருப்பி செலுத்தாத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கா வண்ணம் இந்த புதிய திவால் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த சட்டத்திருத்த மசோதாவை மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்கிழமை, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்திருந்த நிலையில், பல்வேறு விவாதங்களுக்கு பிறகு இன்று (செப் 19) அந்த சட்டத்திருத்த மசோதா மாநிலங்களைவையில் நிறைவேறியது. இதைத்தொடர்ந்து அந்த சட்ட மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட உள்ளது.

  • எஸ். முத்துக்குமார்