×

சுப்ரீம் கோர்ட் அனுமதி... PG மருத்துவ கவுன்சிலிங் தேதி இதுதான் - அமைச்சர் அறிவிப்பு!

 

மத்திய, மாநில அரசுகளின் மருத்துவக் கல்லூரிகளில் அகில இந்திய ஒதுக்கீட்டில் இளநிலை படிப்புக்கு 15% முதுநிலை படிப்புக்கு 50% இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. ஆனால் இந்த ஒதுக்கீட்டில் ஓர் இடம் கூட இதர பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) பிரிவினருக்கு வழங்கப்படவில்லை. ஆகவே அவர்களுக்கு 50% இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இதையடுத்து திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. முதுகலை மருத்துவப் படிப்புகளில் ஓபிசி பிரிவினருக்கு 50% இட ஒதுக்கீடு அமல்படுத்த நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

ஆனால் மத்திய அரசு அமல்படுத்தவிலை. திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இதன்பின்பே பிரதமர் மோடி அகில இந்திய ஒதுக்கீட்டில் 27% ஓபிசி பிரிவினருக்கும் 10% பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவித்தார். இது பெரும் சர்ச்சைக்கு வித்திட்டது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்க கூடாது என திமுக உள்ளிட்ட கட்சிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஏனெனில், ஆண்டுக்கு ரூ.8 லட்சமோ அதற்கு குறைவாக வருமானம் பெறுவோர் இந்த இடஒதுக்கீட்டால் பயன்பெறலாம் என மத்திய அரசு கூறியது.

அது எப்படி ஆண்டுக்கு ரூ.8 லட்சம் வருமானம் பெற்றவர்கள் ஏழைகளாக இருக்க முடியும். ஆண்டுக்கு 8 லட்சம் என்றால் மாத வருமானமே ரூ.66 ஆயிரம் கிடைக்கும். இவர்களை எப்படி ஏழைகளாக ஏற்க முடியும். குறிப்பிட்ட பிரிவினருக்கு சாதகமாக மத்திய அரசு செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதே கேள்வியை உச்ச நீதிமன்றமும் கேட்டது. மத்திய அரசிடம் பதில் இல்லாமல், மூவர் அடங்கிய குழுவை அமைத்து 10% இடஒதுக்கீடு வரம்புகளை ஆராய சொன்னது. இதனிடையே இந்த வழக்கு நிலுவையில் இருந்ததால் நடப்பாண்டுக்கான (அக்டோபர்) முதுநிலை மருத்துவ படிப்பு கலந்தாய்வு நிறுத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

இச்சூழலில் இரு நாட்களுக்கு முன் (டிச.7) உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், 27% இடஒதுக்கீடு செல்லும் என அறிவித்தது. 10% இடஒதுக்கீடும் செல்லும்; ஆனால் அதனை இந்த கல்வியாண்டு கலந்தாய்வில் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும்; அதன் வரம்புகள் குறித்து ஆராய்ந்து விரிவான உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று கூறியது நீதிமன்றம். அதேபோல மருத்துவ கலந்தாய்வை நடத்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. அதன்படி முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு ஜனவரி 12ஆம் தேதி தொடங்கும் என மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.