விமான விபத்தை அறிந்து எனது இதயம் நொறுங்கியது - பிரதமர் மோடி
விமான விபத்தை அறிந்து எனது இதயம் நொறுங்கியது என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 14 குழந்தைகள் உட்பட 242 பேர் உடல் கருகி பலியாகின. விமானம் புறப்பட்ட 3 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கியது. 3,000 அடி உயரத்தில் சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. விமான விபத்துக்குள்ளான பகுதியில் மீட்புப்பணிகள் நடைபெற்றுவருகின்றன. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்து இதுவரை சுமார் 50 சடலங்கள் மீட்கப்பட்டன. விமானத்தில் பயணம் செய்தவர்களில் 169 பேர் இந்தியர்களாவர். ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்துச் சிதறியதை தொடர்ந்து அகமதாபாத் விமான நிலையம் காலவரையின்றி மூடப்பட்டது.
இந்நிலையில் விமான விபத்துக்கு இரங்கல் கூறியுள்ள பிரதமர் மோடி, “அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து துயர சம்பவம் நம்மை அதிர்ச்சிக்கும், வேதனைக்கும் உள்ளாக்கி உள்ளது. வார்த்தைகளால் விவரிக்க முடியாத அளவுக்கு இதயம் நொறுங்கியது. விபத்தில் சிக்கியவர்களுடன் என் மனது உள்ளது. களத்தில் இருக்கும் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறேன். தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளேன். சொந்தங்களை இழந்துவாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.