இந்தியாவின் உண்மையான எஜமான் அம்பானிதானா?- எலான் மஸ்க்
இந்தியாவில் Starlink இணைய சேவையை வழங்குவது தொடர்பாக ஸ்டார்லிங்க் நிறுவனர் எலான் மஸ்க் தனது X தளத்தில் பதிவிட்ட பதிவு தற்போது வைரலாகிவருகிறது.
ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் இணைய சேவை தொடங்குவதற்கு பூர்வாங்க ஒப்புதல் மட்டுமே கிடைத்துள்ளது, மேலும் சில அரசு ஒப்புதல்களுக்காக காத்திருக்கிறது. எலான் மஸ்க்கின் ஸ்டார்லிங்க் நிறுவனம் இந்தியாவில் சேவை வழங்க 20 கேட்வே தளங்களை அமைத்துள்ளது. எனினும் இன்னும் இறுதி உரிமம் (License) வழங்கப்படவில்லை.
இதுதொடர்பாக எலான் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில், “ஸ்டார்லிங்க் நிறுவனம் 165க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளது. மேலும், இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்திற்கும் விதிமுறைக்கும் இணங்கிச் செயல்படுவதில் 5 ஆண்டுகளைச் செலவிட்டுள்ளது. அப்படியிருந்தும் ஏன் இன்னும் அதற்கு உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானியா? துரதிர்ஷ்டவசமாக, இந்திய மக்கள் மீது தங்களது சந்தை ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள சில பெரும் செல்வந்தர்கள் எங்களுக்கு தடையாக உள்ளனர்; அவர்கள் யார் என்பதை உங்களால் யூகிக்க முடியும்... இது இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் குற்றமாகும்!" எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், மணிப்பூரில் ஸ்டார்லிங்க் கருவி கைப்பற்றப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள செய்தியை மேற்கோள் காட்டி, ”இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவை தொடங்கவே இல்லை. யாராவது பயன்படுத்துகிறார்கள் என்று செய்திகள் வந்தால், அதில் உண்மை இல்லை” என்றும் விளக்கம் அளித்துள்ளார்.