எல். முருகன் ராஜினாமா- மாநிலங்களவை இடைத்தேர்தல் அறிவிப்பு!
மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட டாக்டர் எல்.முருகன் தனது பதவியை கடந்த 14-ம் தேதி ராஜினாமா செய்தார். இதனால் அந்த இடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவரது பதவிக்காலம் வரும் 2030-ம் ஆண்டு ஏப்ரல் 2-ம் தேதி வரை இருந்தது.
இந்த காலியிடத்தை நிரப்புவதற்கான இடைத்தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை (No. ECI/PN/123/2026) தேர்தல் ஆணைய செயலாளர் சுமன் குமார் தாஸ் இன்று வெளியிட்டார். அதில் கூறியிருப்பதாவது: "மத்திய பிரதேச மாநிலங்களவை இடைத்தேர்தலுக்கான அறிவிக்கை வரும் 26-ம் தேதி (திங்கட்கிழமை) வெளியிடப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் நவம்பர் 2-ம் தேதி. வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நவம்பர் 3-ம் தேதியும், வாபஸ் பெறுவதற்கான கடைசி நாள் நவம்பர் 5-ம் தேதியும் ஆகும். வாக்குப்பதிவு நவ.12-ல் நடைபெறும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்களிக்கலாம். அன்று மாலை 5 மணிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் நடவடிக்கைகள் அனைத்தும் நவம்பர் 16-ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும்.
மேலும், இந்த தேர்தலில் வாக்களிக்க தேர்தல் அதிகாரி வழங்கும் ஊதா நிற ஸ்கெட்ச் பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வேறு எந்த பேனாவையும் பயன்படுத்தக்கூடாது என்றும், சுதந்திரமான தேர்தலை உறுதி செய்ய பார்வையாளர்கள் நியமிக்கப்படுவார்கள்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.