×

“வரதட்சணையா கார் கொடுக்க முடியாதா?”- மருமகள், ஒன்றரை வயது பேத்தியை கொலை செய்த மாமியார்

 

ஹரியானா மாநிலம் பல்வால் மாவட்டத்தில் வரதட்சணையாக எஸ்யூவி கார் கேட்டு கொடுக்காததால், 25 வயது பெண்ணையும், அவரது ஒன்றரை மாதக் குழந்தையும் மாமியார் வீட்டார் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பல்வால் மாவட்டத்தின் ராஜ்புரா கிராமத்தை சேர்ந்தவர் சோஹில். இவர் கடந்த 2023ஆம் ஆண்டு சகுஃப்தா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒன்றரை வயது மகளும், ஒரு மகனும் உள்ளனர். திருமணம் முடிந்த உடனேயே, சகுஃப்தாவின் மாமியார் வீட்டார் வரதட்சணை கேட்டு அவரைத் துன்புறுத்தத் தொடங்கியதாகவும், ஸ்கார்பியோ கார் கேட்டதாகவும் கூறப்படுகிறது. சகுஃப்தாவின் பெற்றோர் கார் வாங்கி கொடுக்காததால் சோஹிலுக்கு மறுமணம் செய்து வைக்கவுள்ளதாக அடிக்கடி சகுஃப்தாவிடம் அவரது மாமியார் கூறி மிரட்டியுள்ளார். அதுமட்டுமின்றி, சோஹில் கடந்த 15ஆம் தேதி பெற்றோரிடம் கார் வாங்கிவரும்படி சகுஃப்தாவை அவரது பெற்றோர் வீட்டில் கொண்டுபோய் விட்டுள்ளார். பின்னர், அவரது மாமியார் வீட்டார் உறவினர்களான ஜம்ஷெட், அக்ரம் மற்றும் ரஷீத் ஆகியோர் முன்னிலையில் ஒரு கிராமப் பஞ்சாயத்து நடைபெற்றது. ஆகஸ்ட் 17 அன்று சகுஃப்தாவை அவரது மாமியார் வீட்டிற்குத் திருப்பி அனுப்பும்போது, ஒரு ஏர் கண்டிஷனர் மற்றும் 50,000 ரூபாய் கொடுக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டு, அதனை வாங்கிக் கொடுத்ததாகவும் சகுஃப்தாவின் தந்தை யகீன் கூறுகிறார்.

அடுத்த நாள், சகுஃப்தா தனது குடும்பத்தினரை தொலைபேசியில் அழைத்து, தனது கணவரும் மாமியார் வீட்டார்களும் தன்னை மீண்டும் அடிப்பதாகவும், தனது ஒன்றரை வயது மகளை கொன்றுவிடுவேன் என மிரட்டியதாகவும் கூறினார். இதனையடுத்து இன்று சகுஃப்தாவும் அவரது ஒன்றரை மாதக் குழந்தையான ஜுஹானும் இறந்துவிட்டதாக யகீனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். சகுஃப்தாவின் கழுத்தில் நெரித்ததற்கான காயங்கள் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து தந்தை யகீன் புகாரின் அடிப்படையில், சோஹில், அவரது தாய் அஃப்சானா மற்றும் கிராமத் தலைவர் சாஹிப் உட்பட 11 பேர் மீது கொலை மற்றும் வரதட்சணைக் கொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.