பரபரப்பான அரசியல் சூழல் : இன்று கூடுகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்..!!
இன்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூட உள்ள நிலையில் முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று (ஜூலை 21) கூடுகிறது. ஆகஸ்ட் 21ம் தேதி வரை 1 மாத காலத்திற்கு நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில் 21 அமர்வுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில் 8 புதிய மசோதாக்களை அறிமுகப்படுத்தவும் மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு நடைபெறும் முதல் கூட்டத்தொடர் என்பதாலும், இது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்கவும், பிரச்சனைகளை எழுப்பவும் பல்வேறு விவகாரங்களை எதிர்கட்சிகள் கையில் வைத்துள்ளன. குறிப்பாக பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர், இந்தியா பாகிஸ்தான் போர் மற்றும் இந்தியா மோதலை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலையிட்டு நிறுத்தியதாக கூறப்பட்டது, ஆபரேஷன் சிந்தூர் குறித்து உலக நாடுகளுக்கு எம்.பிக்கள் குழு பயணம் மேற்கொண்டது, பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தம், நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம் உள்ளிட்ட முக்கிய பிரச்சனைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
முன்னதாக நேற்று நடைபெற்ற 24 எதிர்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில் இந்த விவகாரங்களை நாடாளுமன்றத்தில் எழுப்புவது குறித்து எழுப்பப்பட்டது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சோனியா காந்தி, ராகுல் காந்திம், திமுக எம்.பி., திருச்சி சிவா மற்றும் இந்தியா கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளை சேர்ந்த பிரநிதிகள் கலந்துகொண்டனர்., அதேநேரம் அனைத்து பிரச்சனைகளையும் விவாதிக்க தயாராக இருப்பதால் மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.