நிறைவடைந்தது மழைக்கால கூட்டத்தொடர்.. மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு..!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததையொட்டி, மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது!
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21ம் தேதி தொடங்கி இன்று வரை 21 நாட்கள் நடைபெற்றது. இதில் பிகார் மாநிலத்தில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் காரணமாக எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை பலமுறை ஒத்திவைக்கப்பட்டது. இறுதி நாளான இன்று காலை மக்களவை கூடியதும் ஏற்பட்ட அமளியால் கூடிய சில நொடிகளில் மக்களவை நண்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
பின்னர் நண்பகல் 12 மணிக்கு மக்களவை மீண்டும் கூடியதும் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மக்களவை உறுப்பினர்கள் என பலரும் அவையில் பங்கேற்றனர். அப்போது மக்களவையின் இறுதி நாளான இன்றைய அலுவல்களை ஒத்திவைத்து விட்டு ‘தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை’ குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி எம்.பி-க்கள் வழங்கிய ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்ததால் மக்களவையில் மீண்டும் அமளி ஏற்பட்டது.
அமளி தொடர்ந்து நீடித்ததாலும், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் இருக்கை முற்றுகையிடப்பட்டதாலும் “தேசிய கீதம்” இசைக்க மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. முன்னதாக 21 நாட்கள் திட்டமிடப்பட்ட மக்களவை, 34 மணி நேரம் மட்டுமே செயல்பட்டுள்ளது என்றும் பல இடையூறுகள் மற்றும் தடைகள் காரணமாக திட்டமிடப்பட்ட நேரத்தை முழுமையாக நடத்த முடியவில்லை என சபாநாயகர் வருத்தம் தெரிவித்துக் கொண்டார். மேலும் மழைக்கால கூட்டத்தொடரின் மக்களவை நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு வழங்கிய பிரதமர் , மத்திய அமைச்சர்கள் , மக்களவை உறுப்பினர்கள் , பத்திரிக்கையாளர்கள் மற்றும் மக்களவை செயலக பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் தெரிவித்துக் கொண்டார்.