×

300 இடங்களில் பாஜக வென்று மீண்டும் மோடி பிரதமராவார்- அமித்ஷா

 

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்கள் வரை வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார் என உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

அசாமில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, “2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜக 300 இடங்கள் வரை வெற்றி பெற்று மூன்றாவது முறையாக மோடி பிரதமராக பதவியேற்பார்.  காங்கிரஸ் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துவிட்டதால், மக்களவையில் தற்போது உள்ள இடங்களின் எண்ணிக்கையை கூட காங்கிரஸால் பெற முடியாது.  புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவை காங்கிரஸ் மற்றும் சில எதிர்க்கட்சிகள் புறப்பணிப்பதாக அறிவித்துள்ளன. இது அரசியல் சூழ்ச்சி. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவை புறக்கணித்து காங்கிரஸ் அரசியல் செய்கிறது. புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவில் கலந்து கொள்ளாமல் இருக்க, ஜனாதிபதியின் பதவியேற்பை சாக்குப்போக்காக பயன்படுத்துகிறது. 

காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் புதிய சட்டசபை கட்டிடங்களுக்கு அந்தந்த ஆளுநர்களுக்கு பதிலாக அந்தந்த முதல்வர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களான சோனியா மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் அடிக்கல் நாட்டிய நிகழ்வுகள் உள்ளன. நாடாளுமன்றத்திற்குள் பிரதமரை பேச காங்கிரஸ் அனுமதிப்பதில்லை. ஆனால் இந்திய மக்கள் மோடிக்கு பேசுவதற்கான ஆணையை வழங்கியுள்ளனர். பிரதமரை மதிக்காமல் இருப்பது மக்களின் ஆணையை அவமதிப்பது போன்றது. 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு அசாமில் ஒரு லட்சம் அரசு வேலைகள் வழங்கப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் 86,000 வேலைகள் வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளவை அடுத்த 6 மாதங்களுக்குள் வழங்கப்படும்” என்றார்.