“எந்த ஒரு தலைவரும் தாக்குதலை நிறுத்த வேண்டும் எனக் கூறவில்லை”- மோடி
அளித்த வாக்குறுதியை ஆப்ரேசன் சிந்தூர் மூலம் நிறைவேற்றி இருக்கிறேன் என பிரதமர் மோடி கூறினார்.
மக்களவையில் ஆப்ரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “அளித்த வாக்குறுதியை ஆப்ரேசன் சிந்தூர் மூலம் நிறைவேற்றி இருக்கிறேன். இந்திய நலன்கள் பற்றி சிந்திக்காதவர்களை கண்ணாடியாக காட்ட விரும்புகிறேன். என் மீது நம்பிக்கை வைத்துள்ள 140 கோடி மக்களுக்கு நன்றி. உலகின் எந்த தலைவரும் இந்திய தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. தாக்குதலை நிறுத்துமாறு பாகிஸ்தான் கெஞ்சியதால் சண்டை நிறுத்தத்துக்கு முடிவு செய்தோம். இதற்குமேல் தாங்க முடியாது என பாகிஸ்தான் கெஞ்சியது. எங்களது இலக்கு பயங்கரவாதிகள்தான் என்பதனை உலகிற்கு தெரியப்படுத்திவிட்டோம். போரை நிறுத்தும்படி எந்த நாட்டு தலைவர்களும் இந்தியாவிடம் கூறவில்லை. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தாக்குதல் நடத்தும் என்று பாகிஸ்தானுக்கு தெரியும். அவர்கள் அணு ஆயுதம் காட்டி மிரட்டினார்கள். ஆனால் மே 7 அதிகாலை 22 நிமிடத்தில், நாம் நினைத்த காரியத்தை முடித்தோம். பாகிஸ்தானால் எதுவும் செய்ய முடியவில்லை.
எங்கே? எப்போது? எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என்பதில் ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது. தீவிரவாதிகளை மண்ணோடு மண்ணாக்குவேன் என பொதுவெளியில் கூறினேன். கற்பனையில் நினைக்காத அளவுக்கு தண்டனை கிடைக்கும் என்றும் உறுதியளித்தேன். அதன்படி, ராணுவத்திற்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு தீவிரவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டது. ஆபரேஷன் சிந்தூரின் போது இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் பார்த்தன. இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடந்தால் அதை ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தியாவின் நடவடிக்கையால் பாகிஸ்தான் அதிர்ந்து போய் நின்று விட்டது. பாகிஸ்தானின் விமானப் படை தளங்களை குறிவைத்து தாக்கி அழித்தோம். நமது ராணுவ வீரர்களுக்கு ஆதரவளிப்பதற்கு பதில், பாகிஸ்தான் ஆதரவு பிரச்சாரத்தை சிலர் முன்னெடுக்கிறார்கள். தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையின்போது இந்தியாவுக்கு உலகின் ஆதரவு கிடைத்தது. ஆனால் காங்கிரசின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை. மோடி தோற்றுவிட்டார் எனக்கூறி காங்கிரஸ் சந்தோஷம் அடைந்தது” என்றார்.