நேதாஜி பிறந்தநாள் : ’ஒவ்வொரு இந்தியனுக்கும் பெருமிதம்’..மோடி, ராம்நாத் கோவிந்த் புகழாரம்..
நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளையொட்டி பிரதமர் மோடி, குடியநசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இந்திய சுதந்திர போராட்டத்தில் பெரும் பங்காற்றியவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். ராணுவ வீரர்களை திரட்டி ஆங்கிலேயருக்கு எதிராக பெரும் போராட்டத்தை நிகழ்த்திய மாவீரர். நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 125 ஆவது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்தவகையில் பிரதமர் மோடி, நேதாஜியின் பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியனும் பெருமை கொள்கிறான் என்று தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “ நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125 ஆவது பிறந்தநாளில் அவருக்கு எனது அஞ்சலி செலுத்துகிறேன். நம்முடைய தேசத்திற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்கு ஒவ்வொரு இந்தியனும் பெருமிதம் கொள்கிறான். நான் நேதாஜி சுபாஷ் சந்திர போஸிற்கு தலை வணங்குகிறேன் “ என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து ரஷ்டிரபதி பவனில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் உருவப்படத்திற்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.