×

தனியார் பயிற்சி மையத்தில் பயங்கர தீ விபத்து - 14 பேர் உயிரிழப்பு

 

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் அரசுத் தேர்வுகளுக்கான பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.  மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. 

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் பூர்ணியா என்ற இடத்தில் பயிற்சி மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது.  அந்த வளாகத்தில் தீப்பிடித்தது. முதலில் மெதுவாக பற்றிய தீ, மளமளவென கட்டடத்தின் அனைத்து பகுதிகளுக்கும் பரவியது.  தீப்பிடித்ததை அறிந்த பயிற்சி மைய மாணவர்கள் அலறினர். என்ன செய்வது என்று தெரியாமல் பீதியில் தவித்த அவர்கள், தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள மாடியில் இருந்து குதித்தனர். உள்ளூர் மக்கள் தீயணைப்புத் துறைக்கும், போலீசாருக்கும் தெரிவித்துவிட்டு கட்டடத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற முயன்றனர். 

சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் சிறிது நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர். தீயில் சிக்கியவர்களில் மொத்தம் 14 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். மீட்பு பணி முழு வீச்சில் நடக்கிறது. உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.