×

மணிப்பூர் கலவரம்-  8 மாதங்களுக்குப் பிறகு 87 சடலங்கள் நல்லடக்கம்

 

மணிப்பூரில் வன்முறையில் உயிரிழந்த 87 பேரின் சடலங்கள், சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு பலத்த பாதுகாப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

மணிப்பூரில் குக்கி பழங்குடியினர் மற்றும் மெய்தி இனத்திற்கும்  கடந்த மே மாதம் முதலே மோதல் போக்கு ஏற்பட்டு வந்த நிலையில் வன்முறை வெடித்தது. இதில் 100க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில், குக்கி சமூகத்தை சேர்ந்த  இரண்டு பெண்களை மெய்தி சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் நிர்வாணமாக இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ கூடுதல் அதிர்ச்சியை கிளப்பியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது இதுதொடர்பாக சிபிஐ விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில் மணிப்பூரில் நடந்த வன்முறையில் உயிரிழந்த குகி சமூகத்தைச் சேர்ந்த 87 பேரின் சடலங்கள் சுமார் 8 மாதங்களுக்குப் பிறகு அடக்கம் செய்யப்பட்டன. இதில் பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையும் அடங்கும்.  மாவட்டம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அடக்கம் நடந்தது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் திரண்டு வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர் வன்முறை சூழல் தொடர்ந்ததால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வதில் சிக்கல் நீடித்தது. உச்ச நீதிமன்றம் தலையிட்டு உத்தரவு பிறப்பித்ததை அடுத்து மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.