☰
×

பெரும் பதற்றம்! கள்ளச்சாராய உயிரிழப்பு எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு

 

மணிப்பூர் மாநிலத்தின் சண்டேல் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதில் 18 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கடந்த நவம்பர் 18-ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த சண்டேல் மாவட்டத்தில் உள்ள சக்பிகராங் (Chakpikarong) மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பலருக்கு வாந்தி, வயிற்று வலி மற்றும் தலைச்சுற்றல் போன்ற பாதிப்புகள் ஏற்பட்டன. அவர்களில் 18 பேர் உயிரிழந்த நிலையில், 600-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்கள் அருந்திய மதுபானம் அண்டை மாவட்டமான காக்சிங்கில் (Kakching) உள்ள சுக்னு (Sugnu) பகுதியிலிருந்து வாங்கப்பட்டதாக காவல்துறை முதற்கட்ட விசாரணையில் தெரிவித்துள்ளது

 பாதிக்கப்பட்டவர்கள் இம்பாலில் உள்ள ஜே.என்.ஐ.எம்.எஸ் (JNIMS), ஆர்.ஐ.எம்.எஸ் (RIMS), ஷிஜா (Shija) உள்ளிட்ட பல்வேறு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இது தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி ஒரு மாதத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

இந்தச் சம்பவத்திற்கு மாநில அரசின் கலால் துறையே பொறுப்பு என்றும், அந்த மதுபானத்தில் மெத்தனால் கலக்கப்பட்டிருந்ததாகவும் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சித் தலைவர் கீஷம் மேகச்சந்திர சிங் தெரிவித்தார்.