உரிமையாளருக்கு ரூ.1.53 கோடி பரிசை பெற்றுக் கொடுத்த சேவல்! ஆந்திராவில் நெகிழ்ச்சி
ஆந்திராவில் நடந்த சேவல் சண்டை பந்தயத்தில் போட்டி சேவலை தோற்கடித்து உரிமையாளருக்கு ரூ1.53 கோடி பரிசு பெற்று தந்த சேவலின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் சங்கராந்தி என்றாலே கோதாவரி மாவட்டத்தில் சேவல் சண்டை நடைபெறுவது வழக்கம். இருப்பினும் இதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இதனை நடத்தக்கூடாது என்று அரசு கூறி வந்தது. ஆனால் சேவல் சண்டைக்கு பெயர்போன கோதாவரி மாவட்டத்தில் அதனைப்பற்றி கவலைப்படாமல் சேவல் சண்டைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அரசியல் தலைவர்கள் பின்புலத்தை கொண்டும் அந்த மாவட்டத்தில் இது சம்பிரதாயங்களின் ஒன்றாக பார்க்கப்படுவதால் போலீசாரும் கண்டும் காணாமல் இருந்து வந்தனர்.
இந்தநிலையில் சங்கராந்திக்கு சேவல் சண்டையில் சேவல் ஒன்று சாதனை படைத்தது. இதுவரை நடந்தவற்றிலேயே மிகப்பெரிய பந்தயமாக ரூ.1.53 கோடிக்கு சேவல் சண்டை நடந்தது. மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள தாடேபள்ளிகுடேமில் வெங்கடராமையா சேவல் சண்டைக்கான வளையத்தில் குடிவாடா பிரபாகர் மற்றும் ராஜமுந்திரி ரமேஷுக்கு இடையே இந்த மிகப் பெரிய பந்தயம் வைக்கப்பட்டது. இதில் இரண்டு சேவல்களுக்கு போட்டி தொடங்கியவுடன் இரு உரிமையாளர்களின் கைகளில் இருந்து வெளியே வந்தவுடன் சேவல்கள் இரண்டும் போட்டியிட்டு சண்டையிட்டது. இதில் ராஜமுந்திரி ரமேஷ் சேவல் பந்தயத்தில் வென்று ரூ.1.53 கோடி பரிசை கைப்பற்றியது. இந்த ஆண்டு மேற்கு கோதாவரி மாவட்டத்தில் நடந்த பந்தயத்தில் இதுவே மிகப்பெரிய பந்தயம் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இவ்வளவு பெரிய பரிசு தொகையுடன் சேவல் சண்டை இதுவரை மாவட்டத்தில் நடந்ததில்லை என்று பந்தயம் கட்டுபவர்கள் கூறுகின்றனர்.