×

"மாடு பால் கொடுப்பதே இல்லை" - போலீஸில் வினோத புகார் கொடுத்த நபர்!

 

அண்மையில் ராமே ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் படம் வெளியானது. அதில் நாயகன் தனது மாடுகளைக் காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் கொடுக்க செல்வார். கிட்டத்தட்ட இதே பாணியிலான ஒரு சம்பவம் மத்தியப் பிரதேச மாநிலத்தில் அரங்கேறியுள்ளது. பிந்த் மாவட்டம் நயாகன் பகுதியைச் சேர்ந்தவர் பாபுலால் ஜாதவ். இவர் எருமை மாடு ஒன்றை வளர்த்து வருகிறார். தினமும் நன்றாக பால் கொடுத்துக் கொண்டிருந்த அந்த எருமை மாடு சில நாட்களாகவே பால் கொடுக்கவில்லை. இதனால் பாபுலாலால் பால் கறக்க முடியவில்லை. 

நன்றாக பால் கொடுத்த மாடு திடீரென நிறுத்திவிட்டதால், பாபுலால் மன வேதனையடைந்துள்ளார். என்ன செய்வதென்று தெரியாமல் அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்திருக்கிறார். அவர்களுக்கு சரியான காரணம் தெரியவில்லை போலும். நம் இந்தியர்கள் எப்போதும் தெரியாமல் நல்லது நடந்தால் சாமி தான் செய்தது என்பார்கள்; கெட்டது நடந்தால் யாரோ பில்லி, சூனியம் வைத்துவிட்டார்கள் என சொல்வார்கள். மாடு பால் கொடுக்காமல் போனதற்கு பில்லி சூனியம் தான் காரணம் என ஒருவர் பாபுலாலிடம் கூறியுள்ளார். 

அப்படி சொல்லியவர் அதோடு விடாமல் யார் வைத்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க போலீஸில் புகார் கொடுக்குமாறும் அறிவுறுத்தியுள்ளார். அதனை சீரியஸாக எடுத்துக்கொண்ட பாபுலால், நயாகன் காவல் நிலையத்திற்கே சென்றுவிட்டார். அங்கு சென்று தனது எருமை மாடு பால் கறக்கவில்லை என்பதால் நடவடிக்கை எடுக்குமாறு எழுத்து மூலம் புகார் கொடுத்து வந்துவிட்டார். பின்னர் சிறிது நேரத்திற்குப் பிறகு  மாட்டை இழுத்துக்கொண்டு மீண்டும் காவல் நிலையத்திற்கு வந்து, மாட்டை பால் கறக்க வைக்க உதவி செய்யுமாறு மன்றாடியிருக்கிறார். பின்னர் காவலர்கள் நிலைமையை அவருக்குப் புரியவைத்து சமதானம் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.