திருமணத்தை திடீரென நிறுத்தியதால் ஆத்திரம்- இளம்பெண்ணின் முகத்தில் ஆசிட் வீசிய இளைஞர்
போதைக்கு அடிமையான உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர், திருமணத்தை ரத்து செய்ததற்காக இளம்பெண் மற்றும் அவரது சகோதரி மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹாபூரில் உள்ள அவாஸ் விகாஸ் காலனியைச் சேர்ந்த ஹர்ஷ் பாட்டி என்பவருக்கும், சிம்பாவலி பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் இரு வீட்டாரின் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. அண்மையில் ஹர்ஷ் பாட்டி போதைக்கு அடிமையானவர் என அறிந்த பெண்ணின் வீட்டார், திருமணத்தை ரத்து செய்தனர். இதனையறிந்த ஹர்ஷ் பாட்டி, ஆசிட்டுடன் அந்த இளம்பெண்ணின் வீட்டிக்கு வந்துள்ளார். கதவு திறக்கப்பட்டவுடன், அவர் தனது முன்னாள் வருங்கால மனைவி மீது ஆசிட் வீசியதாகக் கூறப்படுகிறது. அப்பெண்ணின் சகோதரி தலையிட முயன்றபோது, அவர் மீதும் ஆசிட் வீசியதாக கூறப்படுகிறது. அவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்டு, தப்பி ஓட முயன்ற பாட்டியை குடும்ப உறுப்பினர்கள் பிடித்ததாக காவல்துறை தெரிவித்தது. சிம்பாவலி காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு வந்து அவரைக் கைது செய்தனர். அந்த இரண்டு சகோதரிகளும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.