×

"என்ன மனுஷன்யா நீ" - காதல் மனைவிக்கு "தாஹ்மஹால்" வீட்டை பரிசளித்த "அன்பு" கணவன்!

 

காதலுக்கு இலக்கணம் தாஜ்மஹால் என்பார்கள். முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது காதல் மனைவிக்காக பார்த்து பார்த்து கட்டப்பட்டு அழகு எழில் கொஞ்சும் பிரமாண்டமான மஹால் தான் தாஹ்மஹால். உலகின் ஏழு அதிசயங்களில் அதுவும் ஒன்று என்பதே அதற்குச் சாட்சி. மும்தாஜ் இறந்ததோ மத்தியப் பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில். ஆனால் ஷாஜகான் உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் தாஜ்மஹாலை ஏன் கட்டினார்?

ஏன் என்ற இந்தக் கேள்வி மற்றவர்களுக்கு உதித்ததோ இல்லையோ, மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த ஆனந்த் சோக்சே என்பவருக்கு உதித்துள்ளது. கல்வி நிறுவனம் நடத்திவரும் இவருக்கும் இவரது மனைவியான மஞ்சுஷாவுக்கும் தாஹ்மஹால் என்றால் உயிர். இவரும் தன் காதல் மனைவிக்காக தனக்குப் பிடித்த தாஹ்மஹால் போன்ற வீட்டை உருவாக்க திட்டமிட்டுள்ளார். மத்தியப் பிரதேசத்தில் ஒரு தாஹ்மஹால், மனைவிக்கு அன்பு பரிசு என ஒரே கல்லில் இரு மாங்காய் அடித்துள்ளார்.


 
தாஜ்மஹாலின் கட்டடக் கலையை உன்னிப்பாகக் கவனித்து, அதை போலவே அறைகளை வடிவமைக்குமாறு பொறியியலாளர்கள் கையில் வேலையை ஒப்படைத்துள்ளார். அவர் எதிர்பார்த்தது போலவே நான்கு படுக்கையறைகள், தியான அறை, நூலகம் ஆகியவற்றுடன் கூடிய அந்த பிரமாண்ட தாஹ்மஹால் வீட்டை உருவாக்கி கொடுத்தனர் பொறியியலாளர்கள். இதனைக் கட்டிமுடிக்க மொத்தமாக மூன்று ஆண்டுகள் ஆகியுள்ளது. வீட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் தாஜ்மஹாலை போன்றே இருளில் ஒளிரும் வகையில் ஒளிரும்படி செய்துள்ளனர்.

தாஹ்மஹாலில் உள்ள கோபுரத்தைப் போன்றே இந்த வீட்டின் மேலே அமைந்துள்ள கோபுரம் 29 அடியில் அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல தரைத்தளம் ராஜஸ்தானில் உள்ள மக்ரானில் உருவாக்கப்பட்டது. மேலும் வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் மும்பை கலைஞர்களால் சிறந்த வேலைப்பாடுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. மனைவிக்காக ஆசையாகக் கட்டிய தாஹ்மஹால் போன்ற வீட்டை அவர் உயிருடன் இருக்கும்போதே பரிசாக அளித்துள்ளார் ஆனந்த் சோக்சே. ஆனந்த் சோக்சேவும் மத்தியப் பிரதேச தாஜ்மஹாலும் தான் சமூக வலைதளங்களிலும் வீட்டிலும் இப்போதைய ஹாட் டாபிக்.