×

கர்நாடக முதலமைச்சர் பதவியேற்பு விழாவை புறக்கணித்த மம்தா பானர்ஜி!

 

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்பு விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. 

கர்நாடகாவில் கடந்த மே 10-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்ற நிலையில், அதற்கான வாக்கு எண்ணிக்கை 13ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில், மொத்தமுள்ள 224 இடங்களில் காங்கிரஸ் கட்சி  135 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான பாஜக 66 இடங்களையும், , மஜத 19 இடங்களையும் , சுயேச்சைகள் 4 இடங்களையும் பிடித்தன. பாஜக படுதோல்வி சந்தித்ததை அடுத்து தனது  முதல்வர் பதவியை பசவராஜ் பொம்மை ராஜினாமா செய்தார். அடுத்த அரசு ஆட்சி அமைக்கும் வரை முதலமைச்சர் பதவியில் நீடிக்க ஆளுநர் கேட்டுக்கொண்டார்.  இந்நிலையில், கர்நாடக மாநில முதலமைச்சராக சித்தராமையா தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சியின் மூத்த தலைவர் வி.சி.வேனுகோபால் அறிவித்தார். இதேபோல் அம்மாநில காங்கிரஸ் துணை தலைவர் டி.கே.சிவகுமார் துணை முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சித்தராமையா பதவி ஏற்பு விழா பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நாளை மதியம் 12.30 மணி அளவில் கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சித்தராமையாவுக்கு அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட் பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்கிறார். அதுபோல் டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராக பதவி ஏற்கவுள்ள நிலையில், 20-க்கும் மேற்பட்ட அமைச்சர்களும் பதவி ஏற்க உள்ளனர். 

இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா பதவியேற்கும் விழாவில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கலந்து கொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. மம்தா பானர்ஜி சார்பாக திரிணாமுல் காங்கிரஸ் மக்களை குழு துணை தலைவர் ககோலிகோஷ் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், இமாசல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் ஆகியோருக்கும் அழைப்பு விடுகப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.