×

"தியேட்டர்கள் மீண்டும் மூடல்; மால்கள், சந்தைளுக்கு 5 மணி வரை மட்டுமே அனுமதி" 

 

இந்தியா முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்த வண்ணமே இருக்கிறது. சென்ற வாரம் 10 ஆயிரத்திற்கும் குறைவாகவே தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது. ஆனால் கடந்த இரு நாட்களுக்கு முன்பு அப்படியே டபுளானது. நேற்று முன்தினம் 22 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். நேற்று 27 ஆயிரம் பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார துறை அறிவித்துள்ளது. உயிரிப்பும் 500ஐ நெருங்குகிறது. இரண்டாம் அலையின் தொடக்கத்தில் இருந்தது போல இப்போது கொரோனா அதிவேகமாகப் பரவுகிறது. வருங்காலங்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

மூன்றாம் அலை ஆரம்பமாவதற்கான அறிகுறிகள் அங்கங்கு தென்படுகின்றன. இதன் காரணமாக முன்னெச்சரிக்கையாக பல்வேறு மாநிலங்கள் மினி ஊரடங்கு போட திட்டமிட்டு வருகின்றன. அதற்கு வெள்ளோட்டமாக சிறிய அளவிலான கட்டுப்பாடுகள் மீண்டும் அமலுக்கு வந்துள்ளன. பரவல் அதிகமாக உள்ள மாநிலங்களில் கட்டுப்பாடுகள் சற்று அதிகமாகவே உள்ளன. அந்த வகையில் ஹரியானாவில் அதிகப்படியான தளர்வுகள் குறைக்கப்பட்டு, கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் மட்டுமே பொது இடங்களில் அனுமதி எனவும் அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

தற்போது பெரும்பாலன மாவட்டங்களில் சினிமா தியேட்டர்கள், விளையாட்டு வளாகங்களை மூட உத்தரவிடப்ப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50% பணியாளர்களுடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது. மால்கள் மற்றும் சந்தைகள் மாலை 5 மணி வரை திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மது பார்கள், ஹோட்டல்கள் 50% இருக்கைகளுடன் மட்டுமே செயல்பட வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை ஜனவரி 2 முதல் ஜனவரி 12ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் எனவும் அம்மாநில பேரிடர் மேலாண்மை துறை ஆணையிட்டுள்ளது.