×

மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைப்பு..

 


மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி பேச வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முழக்கமிட்டதால், 5வது நாளாக மக்களவை 2 மணி ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ம் தேதி தொடங்கியது முதல் மணிப்பூர் விவகாரம் குறுத்து விவாதம் நடத்த எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதனால் கடந்த 4 நாட்களாகவே நாடாளுமன்ற அவைகள் எந்த அலுவல் பணிகளும் மேற்கொள்ளாமல் முடங்கின. இந்த நிலையில் இன்றம் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்கக்கோரி 5-வது நாளாக நாடளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. முதலில்,  கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி வீரமரணமடைந்த வீரர்களுக்கு நாடாளுமன்றத்தில்  மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன்பின்னர் மக்களவை அலுவல் படி  11 மணி முதல் 12 மணி வரை கேள்வி  நேரம் நடைபெற்றதால் , அதற்கு பிறகு மணிப்பூர் விவகாரம் குறித்து பேசப்படும் என்று சபாநாயகர் தெரிவித்தார்.  ஆனால் மணிப்பூர் விவகாரம் குறித்து தொடர்ந்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால்  மக்களவை  பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.  அதன்பின்னர் மீண்டும் அவை கூடியதும் பிரதமர் மோடி மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை மக்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் கெளரவ் கோகோய் கொண்டு வந்தார்.

மக்களவையில் பிரதமர் மோடி அரசு மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் விவாதத்துக்கு ஏற்கப்பட்டது.  மேலும்,  நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடக்கும் என்றும்,  பிரதமர் மோடி மீது நாட்டு மக்கள் முழு நம்பிக்கை வைத்துள்ளனர் என நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்தார். மேலும், எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.