×

#BIG NEWS ரூ.1.45 கோடி நஷ்ட ஈடு கேட்டு முதல்வருக்கு இன்ஸ்பெக்டர் நோட்டீஸ்

 

ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபுவிடம் ரூ.1.45 கோடி  கேட்டு மான நஷ்டஈடு கேட்டு இன்ஸ்பெக்டர்  நோட்டீஸ் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநில முன்னாள் அமைச்சரும் முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சொந்த சித்தப்பாவான விவேகானந்தா ரெட்டி கடப்பா மாவட்டம் புலிவெந்துலாவில் அவரது வீட்டில் இருந்தபோது  2019 ஆண்டு மார்ச் மாதம் கொலை செய்யப்பட்டார். அப்போது  புலிவேந்துலாவின் இன்ஸ்பெக்டராக  இருந்தவர்  ஜே. சங்கரையா. இவர் முன்னிலையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் ஆதாரங்களை அழித்து இரத்தக் கறைகளை கழுவியதாக சந்திரபாபு பலமுறை குற்றம் சாட்டியுள்ளார். தனது கடமையைச் செய்யாமல் அலட்சியமாக இருந்ததற்காக 2019 இல் சங்கரையாவை அரசு இடைநீக்கம் செய்தது. கடப்பா எம்.பி. அவினாஷ் ரெட்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் தேவிரெட்டி சிவசங்கர் ரெட்டி ஆகியோர் விவேகானந்த கொலை வழக்கில் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என்று கூறி தன்னை மிரட்டினர். உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்ப வேண்டாம் என்றும் உடலில் காயங்கள் இருப்பதாக யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றும் அவர்கள் மிரட்டியதாக   சங்கரையா ஆரம்பத்தில் சிபிஐயிடம் கூறினார். இருப்பினும் மாஜிஸ்திரேட் முன் தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்ய வராமல் தனக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி அதைத் தவிர்த்து வந்தார். ஒரு வாரத்திற்குள் 2021 ஆண்டு  அக்டோபர் 6 ம் தேதி  அன்று  அப்போதைய ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் அரசு அவரது இடைநீக்கத்தை ரத்து செய்தது. குற்றம் சாட்டப்பட்டவர்களின் செல்வாக்கின் காரணமாக சங்கரையா தனது மனதை மாற்றிக்கொண்டதாக சிபிஐ நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்தது. இப்போது இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. 

இந்தச் சூழலில்  விவேகானந்த ரெட்டி கொலை வழக்கில் சந்திரபாபு தனக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறியதாக சங்கரய்யா  தனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார்.  அந்த நோட்டீஸ்களில், அவதூறாக பேசியதற்காக சட்டமன்றத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும், தனது நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும், அதற்காக  தனக்கு ரூ.1.45 கோடி  மான நஷ்ட ஈடு  வழங்க வேண்டும் எனக்கூறி வழக்கறிஞர் ஜி. தரணேஸ்வர ரெட்டி மூலம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இப்போது இன்ஸ்பெக்டர் சங்கரையா முதல்வர் சந்திரபாபுவுக்கு நேரடியாக நோட்டீஸ் அனுப்பியதன் மூலம் இந்த விவகாரம் புதிய திருப்பத்தை எடுத்துள்ளது.  சங்கரையா தற்போது கர்னூல் சரகத்தில் ஆயுதப்படையில் காத்திருப்பு பட்டியலில்   உள்ளார். முதல்வர் சந்திரபாபுவுக்கு காவல்துறை அதிகாரி ஒருவர் நோட்டீஸ் வழங்கிய சம்பவம் தற்போது மாநிலம் முழுவதும் விவாதப் பொருளாக மாறியுள்ளது.