×

"டெல்டா கொரோனாலாம் ஜூஜூபி... வேற லெவலில் கலக்கும் கோவாக்சின்" - லான்செட் ஆய்வில் தகவல்!

 

இந்தியாவில் தடுப்பூசி போடும் பணிகள் இந்தாண்டு ஜனவரியில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்தியாவின் சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அவசரகால பயன்பாட்டுக்காக அனுமதி வழங்கப்பட்டது. இது பிரிட்டனை சேர்ந்த அஸ்ட்ராஜெனிகா நிறுவனத்தின் தயாரிப்பு. சீரம் நிறுவனம் இந்தியாவில் தயாரித்து விநியோகிக்கிறது. இதையடுத்து கோவாக்சின் தடுப்பூசிக்கும் அனுமதி வழங்கப்பட்டது. இது கோவிஷீல்டை போல் அல்லாமல் முழுக்க முழுக்க இந்தியாவின் தயாரிப்பு.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் என்ற நிறுவனம் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமான ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் ஆகியவை இணைந்து கோவாக்சினை தயாரித்தன. இறந்த அல்லது செயலற்ற ஒரு வைரஸை உடலுக்குள் செலுத்துவதன் மூலம் ஆன்டிபாடிகள் எனும் நோய் எதிர்ப்பாற்றல் உருவாக்கப்படும். இது பாரம்பரியமான நடைமுறை. இந்தத் தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி தான் கோவாக்சின் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் கோவாக்சின் கோவிஷீல்டை விட அதிக செயல்திறன் கொண்டது என பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்தது. 

முதலில் உருவான கொரோனா வைரஸுக்கு எதிராக 93% அளவுக்கு செயல்படுவதாகவும் கூறியது. ஆனால் அதற்குப் பின் சாதாரண கொரோனாவிலிருந்து பல்வேறு உருமாறிய வைரஸ்கள் பரவ ஆரம்பித்தன. உருமாறிய கொரோனாவுக்கு எதிராகவும் கோவாக்சின் சிறப்பாக செயல்படுவதாகவே ஐசிஎம்ஆர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக அமெரிக்காவின் தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய ஆய்விலும் டெல்டா கொரோனா போன்ற வீரியம் அதிகமான வைரஸ்களுக்கு எதிராகவும் கோவாக்சின் அதிக செயல்திறன் கொண்டிருப்பதாக தெரியவந்தது. 


தற்போது பிரபல மருத்துவ இதழான தி லான்செட் ஆய்விலும் கோவாக்சின் கொரோனா வைரஸ்களை மிகச்சிறப்பாக செயலாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாதாரண கொரோனாவுக்கு எதிராக கோவாக்சின் 77.8 சதவீத செயல்திறன் கொண்டிருப்பதாகவும், டெல்டா போன்ற உருமாறிய கொரோனா வைரஸ்களுக்கு எதிராக கோவாக்சின் 65.2 சதவீதம் பயனுள்ளதாக இருப்பதாகவும் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. 2 டோஸ்கள் கொடுக்கப்பட்ட 2 வாரங்களுக்குப் பிறகு உடலுக்குள் வலுவான ஆன்டிபாடிகளை உருவாக்குவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இதனை உறுதிப்படுத்த மேலும் சில ஆய்வுகள் அவசியம் எனவும் லான்செட் கூறியுள்ளது.