×

"ஓரின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி இல்லை" - சர்ச்சையில் சிக்கிய கோலியின் ஹோட்டல்!

 

இந்திய கேட்பன் விராட் கோலிக்கு சொந்தமாக பல்வேறு உணவகங்கள் உள்ளன. அதில் ஒன்று One8 Commune ஹோட்டல். இதன் கிளைகள் புனே, டெல்லி, கொல்கத்தாவில் உள்ளன. தற்போது இந்த ஹோட்டல் தான் சர்ச்சையில் சிக்கியுள்ளது. ஓரின சேர்க்கையாளர்களை ஹோட்டல் நிர்வாகம் அனுமதிப்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுதொடர்பாக yes we exist india என்ற LGBTQ+ அமைப்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

அதில், "விராட் கோலிக்குச் சொந்தமான  One8 Commune ஹோட்டலின் புனே கிளையில் ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. சொமாட்டோவில் உள்ள அவர்களது ஹோட்டல் பேஜில் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கேள்வி எழுப்பினோம். 2 வாரங்களுக்கு மேல் ஆகிறது. ஆனால் அவர்கள் எந்தப் பதிலும் அனுப்பவில்லை. இதுதொடர்பாக ஹோட்டலின் புனே கிளைக்கு போனில் தொடர்புகொண்டு பேசினோம். அவர்கள் ஆண், பெண் இணைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தெரிவித்தனர்.

இல்லையெனில் ஓரின சேர்க்கை அல்லாமல் கூட்டமாக வரும் பெண்களுக்கு மட்டுமே அனுமதி என்றார்கள். ஆண் ஓரின சேர்க்கையாளர்களுக்கு அனுமதி இல்லை என்றும் சொன்னார்கள். டெல்லி கிளைக்கு போன் செய்தோம். அவர்கள் போனை எடுக்கவில்லை. எனினும் கொல்கத்தா கிளை ஓரின சேர்க்கையாளர்களை அனுமதிப்பதாகக் கூறியது. இந்தியாவில் பிரபல ஹோட்டல்கள் ஓரின சேர்க்கையாளர்கள் என்றால் பாகுபாடு காட்டுகிறார்கள். அதற்கு விராட் கோலியின் ஹோட்டலும் விதிவிலக்கல்ல என்பது தெரியவருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது.

விராட் கோலியை டேக் செய்துள்ள அந்த அமைப்பு,  "கோலி இதுகுறித்து உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் உங்கள் ஹோட்டலின் புனே கிளை ஓரின சேர்க்கையாளர்களிடம் பாகுபாடு காட்டுகிறது. மற்ற கிளைகளிலும் இதே நிலை தான். இதனை ஏற்றுக்கொள்ள முடியாதது. இருப்பினும் நீங்கள் தேவையான நடவடிக்கைகளை எடுப்பீர்கள் என நம்புகிறோம்” என்று குறிப்பிட்டுள்ளது. அதேபோல சொமாட்டோ நிறுவனர் தீபிந்தர் கோயலை டேக் செய்து, "ஓரின சேர்க்கை குறித்து உணவகங்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் சிறப்பாகச் செயல்படுங்கள்.

அவர்கள் கேட்கவில்லை என்றால் பாரபட்சம் காட்டும் வணிகங்களுக்கு உங்கள் தளத்தை வழங்குவதை நிறுத்துங்கள். பெரும்பாலும் இது போன்ற பாரபட்சமான கொள்கைகளை கடைப்பிடிப்பது உயர்தர உணவகங்கள் தான்; நீங்கள் பெரும்பாலும் பெரிய அளவிலான விளம்பரப் பணத்தைப் பெறக்கூடியவை. இதற்கு முடிவு கட்ட வேண்டும்” என கூறியுள்ளது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள One8 Commune ஹோட்டல், "நாங்கள் யாருக்கும் பாகுபாடு காட்டவில்லை. அனைவரையும் இன்முகத்துடன் நாங்கள் வரவேற்கிறோம். உபசரிக்கிறோம். நாங்கள் தனியாக வரும் ஆண்களை மட்டுமே வேண்டாம் என்கிறோம். ஏனெனில் பெண்கள் பாதுகாப்பு முக்கியம்” என இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளது.