×

கேரளாவில் பரவும் நோரோ வைரஸ்... ஆபத்தான வைரஸா? அறிகுறிகள் என்ன? 

 

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கேரள பல்வேறு வழிகளில் பேரழிவைச் சந்தித்து வருகிறது. கொரோனா முதல் அலையில் ஓரளவு தாக்குப்பிடித்தாலும் 2ஆம் அலையில் பெரும் பாதிப்பைச் சந்தித்தது கடவுளின் தேசமான கேரளம். இது போதாது என இடையில் நிபா வைரஸ் வேறு வந்து அம்மாநில மக்களின் நெஞ்சத்தை பதைபதைக்க வைத்தது. சமீப நாட்களுக்கு முன்பு மழை, வெள்ளம் என இயற்கைப் பேரழிவு ஆட்டிப்படைத்தது.

தற்போது நோரோ வைரஸ் எனும் புது வைரஸ் கேரளாவிலுள்ள வயநாடு மாவட்டத்தில் கண்டறியப்பட்டுள்ளது. வயாநாட்டில் வைத்திரி அருகே உள்ள பூக்கோடு கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயிலும் சுமார் 13 மாணவர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. நோரோ வைரஸ் குளிர்காலத்தில் பரவும் வைரஸ். இதனை குளிர்காலத்தில் வாந்தியை ஏற்படுத்தும் கிருமி (winter vomiting bug) என்றும் அழைக்கிறார்கள். ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நேரடியாகவே இந்த வைரஸ் பரவும். இதுவும் கொரோனா போல தொற்று வைரஸ் தான்.

நோய் பாதிப்புற்றவர் உபயோகித்த பொருட்கள், உணவுகள், கழிப்பறை ஆகியவற்றின் வழியாக மிக எளிதில் பரவக் கூடியது நோரோ வைரஸ். குறிப்பாக இந்த வைரஸ் குடலை தான் தாக்கும். அதனால்தான் வாந்தி, பேதி, மயக்கம், வயிற்று வலி போன்றவை ஏற்படும். கூடவே காய்ச்சல், தலைவலி மற்றும் உடல் வலியும் உண்டாகும். நோரோ வைரஸ் உடலுக்குள் சென்ற 12 முதல் 48 மணி நேரங்களுக்குள் அறிகுறியைக் காட்டும். இதன் தாக்கம் மூன்று நாட்கள் வரை நீடிக்கும்.

இது கொரோனாவைப் போல ஆபத்தான வைரஸாக இல்லாவிட்டாலும், உடனடி சிகிச்சை கொடுத்தால் விரைவில் குணமடையலாம். வீட்டிலிருந்து சுய மருத்துவம் தேடாமல், அறிகுறி ஏற்பட்டவுடன் மருத்துவரை அணுக வேண்டும். குறிப்பாக கைகளை நன்கு கழுவ வேண்டும். சுத்தமாக உணவு சமைக்க வேண்டும். மீன் போன்ற கடல் உணவுகளை நன்றாக சமைக்க வேண்டும். விலங்குகளிடம் பழகுபவர்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். க்ளோரினால் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அருந்தவும். காய்கறி, பழங்களை நன்றாக கழுவி பயன்படுத்த வேண்டும்.