அதிவேகமாக பரவும் மூளை அமீபா... கேரள மக்கள் பீதி
கேரளாவில் மூளையை உண்ணும் அமீபா பாதிப்பு 18 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கேரளாவில் மூளையை தின்னும் அமீபா என அறியப்படும் ‘அமீபிக் மெனிங்கோ என் செபாலிடிஸ்’ பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது, திருவனந்தபுரம், கொல்லம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் மலப்புரம் ஆகிய இடங்களில் இருந்து தொற்றுகள் பதிவாகியுள்ள நிலையில், 18 பேர் அமீபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஆண்டு மட்டும் 41 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன.
அமீபிக் மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருவதால், மாநிலம் முழுவதும் தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்துமாறு உள்ளாட்சி அமைப்புகளுக்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் உத்தரவிட்டுள்ளார். நீர் மூலம் பரவும் நோய்களை எதிர்த்துப் போராடுவதற்காக அரசாங்கம் "நீரே உயிர்" (ஜலமான் ஜீவன்) பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இந்த பிரச்சாரத்தின் கீழ், கேரளா முழுவதும் உள்ள கிணறுகள் குளோரினேட் செய்யப்படும். மேலும் வீடுகள் மற்றும் நிறுவனங்களில் உள்ள தண்ணீர் தொட்டிகள் ஆகஸ்ட் 30 மற்றும் 31 ஆகிய தேதிகளில் சுத்தம் செய்யப்படும் என அரசு அறிவித்துள்ளது. அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் உள்ளிட்ட நீர் மூலம் பரவும் நோய்கள் பரவுவதைத் தடுக்கவே இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.