×

இதுவே காங்கிரஸ் ஆட்சியாக இருந்தால் கல் அடித்திருக்கலாம்? என்ன பன்றது நம்ம பாஜகவா போச்சு?

 

கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் அரசு இருந்திருந்தால் நாம் சாலையில் இறங்கி கல் எடுத்து அடிக்கலாம் இது நம் அரசு என்ன செய்வது? என பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

கர்நாடக மாநிலம் தக்சின கன்னடா மாவட்டம் பெல்லாராய் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு பாஜக இளைஞர் அணி மாவட்ட செயலாளர் பிரவீன் நெட்டாரு மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இதையடுத்து பாஜக நிர்வாகிகளுக்கு கர்நாடக மாநிலத்தில் பாஜக அரசு பாதுகாப்பு வழங்கவில்லை என பரவலாக குற்றச்சாட்டு எழுந்தது. பாஜக அரசை கண்டித்து சிக்கமங்களூரு இளைஞரணி நிர்வாகிகள் 5 பேர் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பிரவீன் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்ற பாஜக மாநில தலைவர் நளின் குமார் காட்டில் கார் மீது பாஜக நிர்வாகிகள் தாக்குதல் நடத்தினர்.பாஜக தொண்டர்கள் பாஜக அரசுக்கு எதிராக இன்று போராட்டம் நடத்த உள்ளதாக தகவல் வெளியானது.

குறிப்பாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை ஓராண்டு நிறைவை அடுத்து தொட்பலாபூர் நகரில் இன்று  நடக்கவிருந்த மாநாட்டில் பாஜக இளைஞர் அணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தி தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளதாகவும் தகவல் வெளியானது. இதன் காரணமாக முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ஓராண்டு நிறைவு விழாவை ரத்து செய்வதாக அறிவித்தார். அதிருப்தியில் தனது பதவியை ராஜினாமா செய்த சிக்மங்களூரு மாவட்ட இளைஞரணி தலைவர் சங்கீத் இடம் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் தேஜஸ்வி சூர்யா தொலைபேசியில் அழைத்து ராஜினாமாவை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்தி பேசியுள்ளார். அப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசாக இருந்திருந்தால் நாம் சாலையில் இறங்கி கல் எடுத்து அடிக்கலாம் இது நம் அரசு என்ன செய்வது என்று பேசியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.