×

காங்கிரஸ் அபார வெற்றி- தேர்தல் ஆணையம் அறிவிப்பு

 

கர்நாடக பேரவை தேர்தலில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தல் கடந்த மே 10ம் தேதி நடைபெற்றது. 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு, இன்று எண்ணப்பட்டன.  கர்நாடக சட்டப்பேரவை பொறுத்தவரை பாஜக ,காங்கிரஸ்,  மதசார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவிய நிலையில் சுமார் 2615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர். பெரும்பான்மைக்கு தேவையான இடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளதால், அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. 


இந்நிலையில் கர்நாடக பேரவை தேர்தலில் அதிகாரப்பூர்வமாக முடிவுகள் அறிவிக்கப்பட்ட 214 இடங்களில் காங்கிரஸ் 131 இடங்களில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் 5 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பாஜக 60 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாகவும், மேலும் 5 தொகுதிகளில் பாஜக முன்னிலையில் இருப்பதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதேபோல் மதசார்பற்ற ஜனதாதளம் 19 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆட்சியமைக்க உள்ள நிலையில், முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் கட்சி இன்னும் முடிவு செய்யப்படவில்லை. மேலும் குதிரை பேரம் தவிர்ப்பதை தடுக்க அனைத்து எம்.எல்.ஏக்களையும் பெங்களூரு வருமாறு காங்கிரஸ் தலைமை அறிவுறுத்தியுள்ளது. 1989 ஆம் ஆண்டு நடந்த தேர்டலில் காங்கிரஸ் கட்சி 178 இடங்களில் 43.76 சதவீதம் வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றுள்ளது. 1989 ஆம் ஆண்டுக்கு பிறகு எந்தக் கட்ச்யும் 132 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.