×

“எனக்கு துணை முதல்வர் பதவி வழங்க வேண்டும்” காங்கிரஸில் மீண்டும் குழப்பம்

 

நான் முதல்வர் பதவிக்கு தகுதியானவன், எனக்கு துணை முதல்வர் பதவி வழங்க கட்சி தலைமை பரிசீலனை செய்ய வேண்டும் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பரமேஸ்வர் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 135 இடங்களை காங்கிரஸ் கட்சி பெற்று தனி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. முதல்வர் பதவியை கைப்பற்ற முன்னாள் முதல்வர் சித்தராமையா, அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார்,  முன்னாள்  துணை முதலமைச்சர் பரமேஸ்வரர்,  முன்னாள் அமைச்சர் எம் .பி. பாட்டில் ஆகியோர் மத்தியில் போட்டி நிலவி  வந்தது. ஒருவழியாக கட்சி தலைமை பேச்சுவார்த்தை நடத்தி சித்தராமையாவை முதல்வராகவும், டி.கே.சிவக்குமாரை துணை முதல்வராகவும் அறிவித்தனர். இதனையடுத்து நாளை மறுநாள் பெங்களூருவில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. 

இந்நிலையில் பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் பரமேஸ்வர், “இந்த தேர்தலில் பட்டியலின மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு அதிகப்படியான வாக்குகளை செலுத்தி வெற்றி பெற செய்து இருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்க வேண்டும். நான் முதல்வர் பதவிக்கு தகுதியானவன், ஆனால் குறைந்தபட்சமாக எனக்கு துணை முதல்வர் பதவியை வழங்க கட்சி மேலிடம் பரிசீலனை செய்ய வேண்டும். அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும்  சமமாக அமைச்சரவையில் இடம் கொடுக்கப்படும் நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வழி வகுத்திடும்” என தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.