×

காரைக்கால் மாங்கனி திருவிழா ஜூன் 19இல் தொடக்கம்

 

 சிவபெருமானின் அற்புதத்தை போற்றி பாடிய அறுபத்துமூன்று நாயன்மார்களில் முதன்மையாக விளங்குபவர் காரைக்கால் அம்மையார். புதுச்சேரியில் உள்ள காரைக்கால் என்ற ஊரில் ஒரு வணிகக் குடும்பத்தில் செல்வந்தர் மகளாக புனிதவதி என்ற பெயரில் பிறந்த இவர் பரமதத்தன் என்பவரை மணமுடித்து வாழ்ந்து வந்தார். சிவனின் மீது தீராத பக்தி கொண்ட இவர் அவரின் திருவிளையாடலில் சிக்கினார். அதன்படி சிவபக்தியை பரப்ப ஆயத்தமான அவர் தன்னை முழுவதுமாக சிவனிடம் ஒப்படைக்க முடிவு செய்தார்.

ஆனால் இளமையான உருவம் அதற்கு தடையாக இருக்குமோ என்று எண்ணி அவர் ஈசனை நோக்கி தனது இளமை உருவத்தை மாற்றி பேய் போன்ற உருவத்தை தருமாறு பாடினார். புனிதவதியின் கோரிக்கையை ஏற்று அவரது உருவத்தை மாற்றினார் ஈசன் . பேய் உருவோடு அவர் சிவத்தலங்கள் அனைத்திற்கும் சென்று சிவனைப் பாடினார். சிவனைப் போற்றிப் பாடி வந்த அவர் கயிலாயம் அடைந்தார் என புராணங்கள் கூறுகிறது.

இந்நிலையில் பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19ஆம் தேதி காரைக்கால் அம்மையார் ஆலயத்தில் மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது.  சிவபெருமான் பிச்சாடண மூர்த்தியாக வலம் வரும்போது மாங்கனி வீசி வழிபடுவது ஜூன் 21இல் நடைபெறுகிறது.