100 நாள் வேலை பெயர் மாற்ற மசோதா ‘விக்சித் பாரத்' மசோதா அல்ல; ‘விரக்தி பாரத்'- கனிமொழி
மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வழங்கும் நிதி குறித்து மக்களவையில் கனிமொழி எம்பி உரையாற்றினார்.
100 நாள் வேலை திட்டத்துக்கு மாற்றாக கொண்டுவரப்படும் விக்சித் பாரத் ஜி ராம் ஜி மசோதா மீதான விவாதத்தில் உரையாற்றிய திமுக எம்பி கனிமொழி, “100 நாள் வேலை பெயர் மாற்ற மசோதா “விக்சித் பாரத்” மசோதா அல்ல, அது “விரக்தி பாரத்” மசோதா. மசோதாவின் பெயரை படிப்பதே எனக்கு விரக்தியை உண்டாக்குகிறது. மகாத்மா காந்தி ஊரக வேலை வேலைவாய்ப்பு திட்டம் அக்ஷய் பாத்திரமாக இருந்தது. ஆனால் இந்த திட்டத்தை பிச்சை பாத்திரம் ஆக மாற்றி விட்டீர்கள்.
பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா என்ற திட்டம் மூலமாக மாநிலங்களில் பிரதமரின் பெயரில் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்படுகின்றது. ஆனால் உண்மையில் இதற்கான 61% நிதி என்பது மாநில அரசுகள் தான் கொடுக்கிறது. பிரதான் மந்திரி மக்ஷிய சம்பத யோஜனா மத்திய அரசாங்கம் 27% நிதியை மட்டும் தான் இதற்கு வழங்குகிறது. முதியோர் உதவித் தொகை திட்டம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் வழங்குவது தமிழ்நாடு அரசுதான். மத்திய அரசாங்கம் கொடுப்பது என்னமோ வெறும் 200 ரூபாய் தான். ஜல்ஜீவன் மிஷன் 50 சதவீதம் மத்திய அரசு 50% மாநில அரசு என்று சொன்னீர்கள். ஆனால் உண்மையில் தமிழ்நாட்டில் 55 சதவீத நிதியை மாநில அரசு தான் கொடுக்கிறது” என்றார்.