×

"கங்கனாவை மனநல மருத்துவமனைக்கு அனுப்புங்க" - போலீஸில் புகார்!

 

இந்திரா காந்தி 1984ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி அவரது பிரியமான பாதுகாவலர்களான பியந்த் சிங், சத்வந்த் சிங்கால் கொல்லப்பட்டார். இதற்குக் காரணம் சீக்கியர்களின் புனித தலமாகக் கருதப்படும் பொற்கோயிலை இந்திய ராணுவம் தாக்கியதால் தான். காலிஸ்தான் என்ற தனி நாடு கோரி ஆயுதமேந்திய சீக்கியர்கள் 1982ஆம் ஆண்டு ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே என்பவர் தலைமையில் பஞ்சாப் பொற்கோயிலில் தஞ்சம் புகுந்தனர். இந்திரா காந்தி தலைமையிலான அரசு பேச்சுவார்த்தை நடத்தியும் அவர்கள் சமாதானம் அடையவில்லை. 

ஆகவே அவர்கள் மீது தாக்குதல் நடத்த இந்திரா காந்தி இந்திய ராணுவத்துக்கு உத்தரவிட்ட்டார். ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் என்ற பெயரில் நடத்திய தாக்குதலில் 87 ராணுவ வீரர்கள் உள்பட ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் உயிரிழந்தனர். இதன் விளைவாகவே இந்திரா காந்தி சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார் என்பது வரலாறு. இதைச் சுட்டிக்காட்டி மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பப்பெற்றதை விமர்சித்திருந்தார் நடிகை கங்கனா ரணாவத். இதுதொடர்பான அவரின் இன்ஸ்டா பதிவு சர்ச்சையை எழுப்பியுள்ளது.

அந்தப் பதிவில், "காலிஸ்தான் பயங்கரவாதிகள் (பஞ்சாப் விவசாயிகள்) இன்று மத்திய அரசை போராட்டத்தின் மூலம் வளைத்திருக்கலாம். ஆனால் வரலாற்றில் ஒரு பெண்ணை மட்டும் மறக்கவே கூடாது. ஒரெயொரு பெண் பிரதமர் (இந்திரா காந்தி) அவர்களை தனது கால் ஷூவின் கீழ் போட்டு நசுக்கினார். அவர் இந்த தேசத்திற்கு எவ்வவளவு துன்பம் கொடுத்தாலும் தன்னுடைய உயிரைப் பணயம் வைத்து  காலிஸ்தான் பயங்கரவாதிகள் நாட்டை சிதைக்க விடாமல் அவர்களைக் கொசுவைப் போல நசுக்கினார். இன்றும் அவர் பெயரைக் கேட்டால் நடுங்குகிறார்கள். அவரைப் போன்ற ஒரு தலைவர் தேவை” என்று குறிப்பிட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள சிரோமணி அகாலி தளம் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா கங்கனா ரணாவத்தை மனநல மருத்துவமனையில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இவ்வாறு சர்ச்சைக்குரிய வகையில் பேசிய அவரை சிறைக்குள் தள்ள வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஒட்டுமொத்த சீக்கிய சமூகத்தையும் காலிஸ்தானி பயங்கரவாதிகள் என்று குறிப்பிட்ட கங்கனா ரனாவத் மீது அகாலி தள தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.