கொளுத்தும் வெயில்! ஏசி வேண்டாம்.. வெங்காயம் போதும்- மத்திய அமைச்சர் யோசனை
இந்தியா கடும் வெப்ப அலையால் அவதிப்பட்டு வரும் நிலையில், வெப்பத்தைத் தணிக்கும் பழங்கால வைத்திய முறையாக, பாக்கெட்டில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுமாறு மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா மக்களுக்கு அறிவுறுத்தினார்.
குணா தொகுதியில் உள்ள பிச்சோர்-ஷிவ்புரியில் நடந்த ஒரு கூட்டத்தில் உரையாற்றிய சிந்தியா, “கொளுத்தும் கோடையில் உங்கள் சட்டைப்பையில் ஒரு வெங்காயத்தை வைத்துக்கொள்ளுங்கள். அது வெப்பநிலையைச் சீராக்க உதவும். வெப்ப அலையால் உங்களுக்கு எதுவும் ஆகாது. 51 டிகிரி வெப்பத்திலும் ஒன்றும் ஆகாது. நான் ஏசி அறையில் இருக்க மாட்டேன். காரில் செல்லும்போது கூட ஏசியை போடமாட்டேன்” என்றார்.
பிற்பகலில் வீசும் பலத்த தரைக்காற்று அசௌகரியத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மாலை நேரங்களிலும் வெப்பக் காற்று தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெப்பம் தொடர்பான நோய்களைத் தடுக்க, பிற்பகல் உச்ச நேரங்களில் மக்கள் வெளியே செல்வதைத் தவிர்க்கவும், போதுமான அளவு நீர் அருந்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.