ராஜினாமாவுக்கு பிறகு ஜெகதீப் தன்கரை காணவில்லை.. - பகீர் கிளப்பும் சஞ்சய் ராவத்..!!
குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து ஜெகதீப் தன்கரை காணவில்லை என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
குடியரசுத் துணைத் தலைவர் ஜெகதீப் கடந்த ஜூலை 21மாலை தனது பதவியை ராஜினாமா செய்தார். 74 வயதான தன்கர், உடல் நலம் மற்றும் மருத்துவ காரணங்களுக்காக தனது பதவியை ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார். கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் துணை குடியரசுத் தலைவராக பதவியேற்ற அவரது பதவிக்காலம் 2027ம் ஆண்டு வரை உள்ளது. ஆனால் 3 ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்த அவர், திடீரென தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்திருப்பது , அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
இருப்பினும் அவரது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டதாக குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அறிவித்துள்ளார். தற்போது துணை குடியரசுத் தலைவர் பதவி காலியாக உள்ள நிலையில், குடியரசு துணைத் தலைவர் தேர்தல் செப்டம்பர் 9ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனிடயே ஜெகதீப் தன்கர் ராஜினாமாவுக்கு அழுத்தமான அரசியல் காரணம் இருப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்பின.
அத்துடன் அவர் அவமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியான நிலையில், முந்தைய துணை குடியரசு தலைவர்களை விட ஜெகதீப் தன்கருக்கு குறைவான வெளிநாட்டு பயணம் ஒதுக்கப்பட்டதால் அவர் அதிருப்தியில் இருந்தார் என்றும் கூறப்பட்டது. வெளிநாடுகளுக்கு சென்றபோது துணை ஜனாதிபதிக்கான நெறிமுறைகள் மீறப்பட்டதாகவும், நெறிமுறைகள் மீறல் குறித்து வெளியுறவு அமைச்சகத்திடம் ஜெகதீப் தன்கர் அலுவலகம் பலமுறை புகார் அளித்துள்ளதாகவும் கூறப்பட்டது. வெளியுறவு விவகாரங்களை பொறுத்தவரையில் முந்தைய துணை குடியரசுத் தலைவர்களை விட தன்கருக்கு குறைவான முக்கியத்துவம் அளித்ததாக அவர் கருதியதாகவும் தகவல்கள் கூறுகின்றன.
இந்த நிலையில் பதவியை ராஜினாமா செய்ததற்கு பிறகு ஜெகதீப் தன்கரை காணவில்லை என சிவசேனா எம்.பி., சஞ்சய் ராவத் கூறியுள்ளார். மேலும் அவர், “குடியரசு துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்ததில் இருந்து ஜெகதீப் தன்கர் எங்கு இருக்கிறார்? அவரது உடல்நிலை எப்படி உள்ளது? பாதுகப்பாக உள்ளாரா? எந்த தகவலும் தெரியவில்லை. எம்.பிக்களால் அவரை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. தன்கர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வதந்திகள் பரவுகின்றன. ஜெகதீப் தன்கர் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நாங்கள் ஆட்கொணர்வு மனுவைத் தொடுப்பதற்குள் அவர் குறித்தான தகவல்களை உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டு மக்களுக்ஜ்கு தெரிவிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.