×

2024 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட தயாரா? சந்திரபாபு நாயுடுவுக்கு ஜெகன் மோகன் ரெட்டி கேள்வி

 

ஆந்திராவில் 175 தொகுதிகளில் தனியாக போட்டியிட சந்திரபாபு நாயுடுவிற்கும், பவன் கல்யாணிக்கும் தைரியம் உள்ளதா? என முதல்வர் ஜெகன்மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.


 


ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் தெனாலியில் நான்காவது ஆண்டிற்கான ஒய்எஸ்ஆர் விவசாயி பரோசா பிரதமர் கிசான் நிதியை முதல்வர் ஜெகன் விவசாயிகள் வங்கி கணக்கில் செலுத்தினார். பின்னர் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய ஜெகன் மோகன் ரெட்டி, “மாநிலத்தில் இன்று போர் நடந்து வருகிறது.  அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில்  சந்திரபாபுவுக்கும் உங்கள் வீட்டு  பிள்ளைகளுக்கும் எனக்கும் போர் நடக்கப்போகிறது.  ஏழை, நடுத்தர மக்களின் பிள்ளைகளுக்கு அரசு பள்ளியில் இங்கிலீஷ் மீடியம் பாட பிரிவு வேண்டாம் என கூறிய  சந்திரபாபுவுடன் உங்கள் பிள்ளைகள் போர் செய்ய போகிறேன்.  

சந்திரபாபு தலைமையிலான கொள்ளை கும்பல் கொள்ளையடிப்பது, பகிர்வது, சாப்பிடுவதை மட்டுமே செய்துவருகிறது. இந்த கும்பலுக்கு வளர்ப்பு மகன் பவன் கல்யாண்  கூட்டு. சந்திரபாபுவால் ஏன் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியவில்லை?  அந்தப் பணம் எல்லாம் யாருடைய பாக்கெட்டுக்குச் சென்றது?  இப்போதும் அதே பட்ஜெட், அதே மாநிலம் ஆனால் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. ஏழைகளுக்கு வீடுகள் கொடுப்பதை எதிர்க்கிறார்  சந்திரபாபு.  நாங்கள் நல்லது செய்தோம், எனவே நல்லது நடந்ததாக நீங்கள் உணர்ந்தால், எங்களுக்கு வாக்களித்தால் போதும். உங்கள் வீட்டில் நல்லது நடந்ததா என்று பாருங்கள்.  கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி வருகிறோம்.  

சந்திரபாபுவுக்கும் அவரது வளர்ப்பு மகனுக்கும் நான் சவால் விடுகிறேன். 175 தொகுதிகளில் தனிதனியாக போட்டியிட்டு வெற்றி பெறும் தைரியம் உங்களுக்கு உள்ளதா?  ஆனால் நான்  பயப்படவில்லை. நாங்கள் செய்த நல்லதைச் மக்கள் நலத்திட்டத்தை கூறி மீண்டும் ஆட்சிக்கு வருவோம்” என்றார்.