×

நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ்தான்,  ஜனநாயகம் அல்ல.. பா.ஜ.க. தலைவர் பதிலடி

 

இந்திய ஜனநாயக கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது என்ற ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு, நாட்டில் ஆபத்தில் இருப்பது காங்கிரஸ்தான்,  ஜனநாயகம் அல்ல என்று பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா தெரிவித்தார்.


கர்நாடகாவில் பா.ஜ.க. சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அந்த கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பேசுகையில் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர்கள் ஊழல், கமிஷன், கிரிமினல்மயமாக்கலில் ஈடுபட்டுள்ளனர், பிரித்து ஆட்சி செய்வதே அவர்களின் கொள்கை. இப்போது அவர்கள் எல்லா வரம்புகளையும் தாண்டி விட்டார்கள். ராகுல் காந்தி இங்கிலாந்துக்கு சென்று இந்தியாவின் இறையாண்மை குறித்து கேள்வி எழுப்புகிறார். இங்கு (இந்தியாவில்) ஜனநாயகம் முடிந்து விட்டது என்கிறார். 

சமீபத்தில் நடந்த மூன்று மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு  நாகாலாந்தில் ஒரு இடம் கூட கிடைக்கவில்லை, மேகாலயாவில் 5 இடங்களிலும், திரிபுராவில் 3 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆபத்தில் இருப்பது ஜனநாயகம் அல்ல, உங்கள் கட்சிதான் ஆபத்தில் உள்ளது. அத்தகைய தலைவர்கள் (அரசியலில்) தொடர்ந்து இருக்க நாம் அனுமதிக்க வேண்டுமா?. அவர்களை வீட்டில் உட்கார வைக்க வேண்டும். இந்தியாவின் இறையாண்மைக்கு ராகுல் காந்தி சவால் விடுகிறார், ஜனநாயகம் பற்றி போதிக்க காங்கிரஸ் முயற்சிக்கிறது. 

இந்திரா காந்தியின் தலைமையில் மத்தியில் இருந்த காங்கிரஸ் அரசுதான்  நாட்டில் எமர்ஜென்சியை அமல்படுத்தியது. நாட்டின் அரசியல் கலாசாரத்தை மாற்றியதில் பிரதமர் மோடி முக்கிய பங்காற்றியுள்ளார். காங்கிரஸால் பிரச்சாரம் செய்யப்படும் அரசியல் ஊழல், கமிஷன், கிரிமனல்மயமாக்கல், வம்ச ஆட்சி. ஆனால் மக்களுக்கு சேவை செய்வதில் நம்பிக்கை கொண்ட வலுவான மற்றும் பொறுப்புள்ள அரசாங்கம்  பிரதமர் மோடியால் நிறுவப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.