×

"இந்தியாவில் ஒமைக்ரானுக்கு முதல் பலி... 2 டோஸ் போட்டுக்கொண்டவர்" - ஷாக் தகவல்! 

 

இந்தியாவில் உருமாறிய டெல்டா கொரோனா மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. பல்லாயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்தது. இதனால் தான் டெல்டா கொரோனா இதுவரை வந்ததிலேயே மிகவும் அபாயகரமான கொரோனா என அழைக்கப்படுகிறது. மற்ற வைரஸ்களை விட 50% வேகமாகப் பரவும். அதேபோல நுரையீரல் செல்களை பாதித்து உயிரையும் குடித்தது. ஆனால் இப்போது வந்துள்ள ஒமைக்ரான் டெல்டாவை விட வேகமாகப் பரவுகிறது. இருப்பினும் நுரையீரலுக்குள் சென்று பாதிப்பை ஏற்படுத்தவில்லை. 

ஆனால் 2 டோஸ் போட்டுக்கொண்டவர்களையும் தாக்குகிறது. லேசான பாதிப்பை தான் ஏற்படுத்துகிறது. ஒமைக்ரான் பாதிக்கப்பட்ட 80% பேர் மருத்துவமனையில் கூட அனுமதிக்கப்படுவதில்லை. வீட்டிலிருந்தபடியே  விரைவில் மீண்டுவிடுகிறார்கள். இப்படி சொல்லிக் கொண்டிருக்கும்போதே பிரிட்டன், அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகளில் தலா ஒரு நபர் ஒமைக்ரானால் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் தடுப்பூசி செலுத்தாதவர்கள், இணை நோயுடன் கூடிய 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், ஒமைக்ரானுக்கு பலியாகி இருக்கலாம் என சொல்லப்பட்டது.

இச்சூழலில் இந்தியாவில் ஒமைக்ரான் தொற்றுக்கு முதல் நபர் பலியாகியுள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் லட்சுமிநாராயண நகரில் 73 வயது முதியவர் ஒருவர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். கடந்த டிசம்பர் 15ஆம் தேதி கொரோனா தொற்று கண்டறியப்பட்டவுடன், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஏற்கெனவே நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் இருந்துள்ளது. அவர் 2 டோஸ் போட்டுக்கொண்டவர். அவர் எங்கு சென்றார். அவருக்கு எப்படி தொற்று ஏற்பட்டது என எதுவும் தெரியவில்லை.

இதையடுத்து அவருடைய மாதிரிகளில் ஜீனோம் மரபணு பரிசோதனை செய்யப்பட்டது. இதனிடையே 21ஆம் தேதி அவருக்கு நெகட்டிவ் என வந்தது. டிசம்பர் 25ஆம் தேதி ஜீனோம் ஆய்வு முடிவு வெளிவந்தது. அதன்படி அவருக்கு ஒமைக்ரான் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. ஆனால் அடுத்த ஆறு நாட்களில் அதாவது டிச.31ஆம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் அந்த முதியவர் உயிரிழந்தார். அவருக்கு இணை நோய்கள் இருந்தபோதிலும் ஒமைக்ரான் தீவிரத்தால் தான் அவர் உயிர் பிரிந்தது என மத்திய சுகாதார துறை தெரிவித்துள்ளது. இந்தச் செய்தி தான் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 2,135 பேர் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளனர்.