×

ஒரே நாளில் 90,928 பேருக்கு கொரோனா... தினசரி இரட்டிப்படையும் பாதிப்பு - 3ஆம் அலையின் கொடூரம்!

 

இந்தியாவில் கொரோனா முதல் அலை ஓரளவு சாதாரணமாகவே இருந்தது. ஆனால் இரண்டாம் அலை அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியது. மறக்க முடியாத ஒரு பாடத்தைக் கற்பித்து விட்டு சென்றது. ஆக்சிஜனுக்காக மக்கள் தட்டழிந்தனர். சுடுகாட்டில் பிணங்கள் வரிசை கட்டி நின்றன. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டதுடன், லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். தொடர்ந்து மூன்றாம் அலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்தன.  இதனால் தொற்று பாதிப்பு வெகுவாக குறைந்தது. 

தற்போது புதிய வகை ஒமைக்ரான் கொரோனாவால் மூன்றாம் அலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே டெல்டா பரவி வந்தது. அதனுடன் இதுவும் சேர்ந்துகொண்டதால் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இரட்டிப்படைகிறது. மீண்டும் கொரோனா பரவல் தலைதூக்க ஆரம்பித்துள்ளது.  இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 90,928ஆக உயர்ந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 58,097ஆக இருந்தது. ஒரே நாளில் 58 சதவீதமாக உயர்ந்துள்ளது.

மகாராஷ்டிராவில் 26,538 பேரும், மேற்கு வங்கத்தில் 14,022 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 10,665ஆக பதிவாகியுள்ளது. 325 பேர் இறந்துள்ளனர். நேற்றை ஒப்பிடுகையில் 500ஐ கடந்திருந்தது. அதேபோல ஒமைக்ரான் கொரோனாவால் 2,630 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 797 பேரும், டெல்லியில் 465 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒமைக்ரான் 26 மாநிலங்களில் பரவியுள்ளது. தினசரி பாதிப்பு விகிதம் 6.43% ஆக உயர்ந்துள்ளது. குணமடையும் விகிதம் தற்போது 97.81% ஆக உள்ளது.