×

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு இந்தியா பதிலடி

 

 

ரஷ்யாவிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறிவைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதாக கூறி, இந்தியப் பொருட்களுக்கு 25 சதவீதம் வரி விதித்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இன்று மேலும் 25 சதவீதம் வரி விதிப்பை அறிவித்தார். இதனால் இந்தியப் பொருட்களின் மீதான வரி விதிப்பு 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த ட்ரம்ப் கெடு விதித்திருந்தார். அதற்கு இந்தியா செவி சாய்க்காததால் புதிய வரி விதிப்பு தொடர்பான உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்துட்டுள்ளார். அமெரிக்கா விதித்துள்ள கூடுதல் வரியால் இந்திய வர்த்தகம் பாதிக்கப்படும் என அபாயம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஷ்யாவிலிருந்து நமது எண்ணெய் இறக்குமதியை இலக்காகக் கொண்ட அமெரிக்காவின் சமீபத்திய நடவடிக்கையை இந்தியா கடுமையாக எதிர்க்கிறது என அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், இந்தியா தனது தேசிய நலன்களை பாதுகாக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், இந்தியாவின் மீது அமெரிக்கா கூடுதல் வரிகளை விதித்தது மிகவும் துரதிர்ஷ்டவசமானது எனவும் கூறியுள்ளது. இந்திய இறக்குமதி பொருட்களுக்கு அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்தது நியாயமற்றது என்றும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

-