×

வெளியானது ‘இந்தியாவின் 21ஆம் நூற்றாண்டு வரைபடம்’ – வரைபட கொள்கையில் தளர்வு… பிரதமர் மோடி புகழாரம்!

ஆறுகளை இணைத்தல், தொழில் வளாகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட தேசிய உள்கட்டமைப்புக்கு வரைபடங்களும், துல்லியமான புவியியல் விவரங்களும் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மின்னணு வணிகம் (E-commerce), ட்ரோன்கள், டெலிவரி, உணவு மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லுதல், நகர்ப்புற போக்குவரத்து ஆகியவற்றுக்கு துல்லியமான வரைபடமும் புவிசார் தரவுகளும் இந்த டிஜிட்டல் உலகத்தில் அவசியமானதாக இருக்கிறது. அதேபோல விவசாயம், கட்டுமானம், சுரங்கம், உள்ளூர் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் முனைவு போன்ற ஒவ்வொரு பொருளாதார முயற்சிக்கு
 

ஆறுகளை இணைத்தல், தொழில் வளாகங்களை உருவாக்குதல் உள்ளிட்ட தேசிய உள்கட்டமைப்புக்கு வரைபடங்களும், துல்லியமான புவியியல் விவரங்களும் மிக முக்கியமானவையாக இருக்கின்றன. டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி, மின்னணு வணிகம் (E-commerce), ட்ரோன்கள், டெலிவரி, உணவு மற்றும் பொருட்களைக் கொண்டு செல்லுதல், நகர்ப்புற போக்குவரத்து ஆகியவற்றுக்கு துல்லியமான வரைபடமும் புவிசார் தரவுகளும் இந்த டிஜிட்டல் உலகத்தில் அவசியமானதாக இருக்கிறது.

அதேபோல விவசாயம், கட்டுமானம், சுரங்கம், உள்ளூர் நிறுவனங்கள், சிறு, குறு தொழில் முனைவு போன்ற ஒவ்வொரு பொருளாதார முயற்சிக்கு புவியியல் தரவு மற்றும் வரைபட சேவைகள் ஆதாரமாக இருக்கின்றன. ஆனால், இந்தியாவில் இந்தத் தரவுகளைப் பெறுவது அவ்வளவு எளிதான காரியமாக இருந்ததில்லை. தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் கூகுள் வரைபடங்கள் கூட வெளிநாட்டைச் சேர்ந்த நிறுவனம் தான். இந்தியாவில் பிரபலமான வரைபட சேவை நிறுவனமே இல்லை.

காரணம் மத்திய அரசின் முந்தைய வரைபட கொள்கை. ஏனெனில், வரைபடத்தை உருவாக்குவதிலிருந்து அதனைச் சந்தைப்படுத்துவது வரை அனைத்திற்கும் அரசிடம் முன் அனுமதி பெற்றே ஆக வேண்டும். இதனால் புதிய நிறுவனங்கள் பல்வேறு தடைகளைச் சந்தித்தன. இதனால் வரைபட தொழில்நுட்பத்தில் பல தசாப்தங்களாக எந்தவித புதிய கண்டுபிடிப்பும் நாட்டுக்குக் கிடைக்கப்பெறவில்லை. குறிப்பாக, சர்வதேச அளவில் கிடைக்கும் இந்திய வரைபடம் குறித்த தகவல்களையும் பெறுவதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அரசு அனுமதியுடனே சர்வதேச நிறுவனங்களிடமிருந்தும் தரவுகளைப் பெறவேண்டிய சூழல் இருந்தது.

மேற்கூறியவற்றையெல்லாம் கருத்தில்கொண்டு 5 டிரில்லியன் கனவுத் திட்டமான சுயசார்பு இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாக இந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவதாக மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை அறிவித்துள்ளது. அனைத்துக் கட்டுப்பாடுகளும் தாராளமயமாக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய எல்லைக்குட்பட்ட வரைபட தகவல்களைச் சேகரித்தல், உருவாக்குதல், வெளியிடுதல், புதுப்பித்தல் என அனைத்திற்கும் இனி அரசிடம் அனுமதி பெற அவசியமில்லை என்று கூறியிருக்கிறது. அதேபோல வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்தும் நேரடியாகத் தரவுகளைப் பெற்றுக்கொள்ளலாம்.

இத்திட்டத்திற்கான அடித்தளமாகவும் கூகுள் நிறுவனத்துக்குப் போட்டியாகவும் இஸ்ரோவும் Map my India நிறுவனமும் கைகோர்த்துள்ளன. இந்தச் செயலி வந்துவிட்டால் கூகுள் எர்த், கூகுள் மேப் உள்ளிட்ட செயலிகளை இந்தியர்கள் சார்ந்திருக்க அவசியமில்லை என்று கூறப்படுகிறது. அதேசமயம் ஒரு இந்திய நிறுவனத்திடம் தரவுகள் சேமிக்கப்பட்டிருக்கும் என்பதால், அதனின் பாதுகாப்பு தன்மையும் உறுதிப்படுத்தப்படும்.

தொழில் நிறுவனங்களுக்கு எதற்காக புவியியல் தரவுகள் தேவைப்படுகின்றன ஒரு கேள்வி எழலாம். இப்போது தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் தொழில் தொடங்க வேண்டும் என்றால், அந்த இடத்தின் தட்பவெப்ப நிலை, அங்கிருக்கும் ஆற்றல்கள் உள்ளிட்ட புவியியல் தரவுகள் நிச்சயம் தேவை. அப்படிப்பட்ட தரவுகளைக் கூகுள் போன்ற வெளிநாட்டு நிறுவனங்களே வழங்கிவந்தன. அப்படி வழங்கிவந்தாலும் அதைப் பெற அரசிடம் பல்வேறு அனுமதிகளைப் பெற வேண்டும். அந்தக் கட்டுப்பாட்டைத் தான் தற்போது தளர்த்தியிருக்கிறது மத்திய அரசு.

இனி வரைபட துறையில் இருக்கும் நிறுவனங்களிடமிருந்து, குறிப்பாக இந்திய நிறுவங்களிடமிருந்து தொழில் துறையில் இருக்கும் நிறுவனங்கள் எளிதாகப் புவியியல் தரவுகள் மற்றும் வரைபட சேவைகளைப் பெற்றுக்கொள்ளலாம். இதன்மூலம் இந்திய வரைபடத் துறையில் குறிப்பிடத்தக்க மாற்றமும், அதிகமான தொழில் முனைவோர்கள் உருவாகி உள்நாட்டுப் பொருளதாரம் சிறக்கும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக இருக்கிறது.

இதுகுறித்து ட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, தனது தலைமையிலான அரசு வரைபட கொள்கையில் மிகப்பெரிய சீர்திருத்தம் செய்திருப்பதாகப் புகழ்ந்து கூறியிருக்கிறார். சுயசார்பு இந்தியா கனவு திட்டத்திற்கான மிகப்பெரிய படிகளில் இதுவும் ஒன்று என்றும் தெரிவித்திருக்கிறார்.