×

இந்தியாவில் மேலும் 2 வேக்சின்கள், 1 மாத்திரைக்கு அனுமதி - மத்திய அமைச்சர் ட்வீட்!

 

இந்தியாவில் கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக்-வி, ஜைகோவ்-டி ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதில் கோவாக்சின் முழுக்க முழுக்க இந்தியாவில் தயாரிக்கப்பட்டது. கோவிஷீல்டு பிரிட்டன் நிறுவனமான அஸ்ட்ராஜெனிகாவுடன் இந்தியாவின் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. இந்தியா முழுவதும் சீரம் நிறுவனம் தான் விநியோகிக்கிறது ஸ்புட்னிக்-வி ரஷ்ய தடுப்பூசி. இதில் கோவிஷீல்டு, கோவாக்சின் இந்தியாவில் பிரதானமாக செலுத்தப்படுகிறது. ஜைகோவ்-டி இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை.

இச்சூழலில் மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனை மத்திய சுகாதார துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார். அதன்படி கோர்பிவேக்ஸ், கோவோவேக்ஸ் ஆகிய இரு கொரோனா தடுப்பூசிகளுக்கும் மால்னுபிரவிர் எனும் வாயில் உட்கொள்ளக் கூடிய மாத்திரைக்கும் மத்திய அரசு அனுமதி கொடுத்துள்ளது. கோர்பிவேக்ஸ் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதல் RBD புரத தடுப்பூசி. இது ஹைதராபாத்தைச் சேர்ந்த பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. 


கோவோவேக்ஸ் தடுப்பூசி சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. அதேபோல மால்னுபிரவிர் மாத்திரை கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூத்த குடிமக்கள் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதற்கும், நோயின் பாதிப்பு அதிகம் உள்ளவர்களுக்கும் அவசரகால பயன்பாட்டிற்காக அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 13 நிறுவனங்களால் மால்னுபிரவிர் தயாரிக்கப்படும் என்று சுகாதார அமைச்சர் கூறியுள்ளார். அமெரிக்காவைச் சேர்ந்த Merck, Sharp and Dohme (MSD) மற்றும் Ridgeback Biotherapeutics ஆகிய மருந்து நிறுவனங்களால் மோல்னுபிரவீர் தயாரிக்கப்பட்டுள்ளது.இதுதவிர மாடர்னா, ஜான்சன் மற்றும் ஜான்சன் ஆகிய தடுப்பூசிகளுக்கு அனுமதி வழங்கியபோதும் பயன்பாட்டுக்கு வரவில்லை.