×

இந்தியாவில் அதிகரிக்கும் உடல் பருமன் பிரச்சனை- சிபிஎஸ்இ பள்ளிகளில் விழிப்புணர்வு

 

ஆரோக்கியமான வாழ்வியல் முறை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் எண்ணெய்களின் பயன்பாட்டு அளவு குறித்த அறிவிப்பு பலகைகளை அனைத்து பள்ளிகளிலும் வைக்குமாறு சிபிஎஸ்இ அறிவுறுத்தியுள்ளது.

தேசிய குடும்ப ஆரோக்கியக் கணக்கெடுப்பு மற்றும் THE LANCET GBD 2021 ஆகிய ஆய்வுகளின்படி உடல் பருமன் அதிகரித்துள்ளது. பள்ளி மாணவர்களும், இளம் வயதில் உள்ளவர்களும் உடல் பருமனால் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். 2021 ஆம் ஆண்டு 18 கோடி மாணவர்களாக இருந்த எண்ணிக்கை 2050-ல் 44 கோடியாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. நகர் பகுதிகளில் வாழும் இந்தியர்களில் ஐவரில் ஒருவருக்கு உடல் பருமன் பாதிப்பு உள்ளது என்று மத்திய அரசின் ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆகவே மாணவர்கள் மத்தியில் உடல் பருமன் அதிகரிப்பை தடுக்க சிபிஎஸ்இ மூலம் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அனைத்து பள்ளிகளிலும் உடல் பருமன் பாதிப்பு குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் சிபிஎஸ்இ கூறியுள்ளது.

அனைத்து CBSE பள்ளிகளிலும் 'ஆயில் போர்ட்' என்ற உணவு விழிப்புணர்வு தகவல் பலகை வைக்கவும், உணவு பழக்க வழக்கங்கள், உணவில் உள்ள சர்க்கரையின் அளவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த பதாகைகள் கட்டாயம் வைக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உணவில் உள்ள எண்ணெய் அளவு, கொழுப்பு உணவுகளால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.