×

"கோவாக்சின் 3வது டோஸ் செம எபெக்ட் காட்டுது" - குட்நியூஸ் சொன்ன ஐசிஎம்ஆர்! 

 

வைரஸ்களின் இயல்பே உருமாறுவது தான். அவ்வாறு உருமாறும்போது அதன் வீரியமும் பரவும் வேகமும் அதிகரிக்கலாம். சில சமயங்களில் இதற்கு நேரெதிராகவும் நடக்கலாம். கொரோனா வைரஸும் இதற்கு விதிவிலக்கல்ல. சாதாரண கொரோனாவிலிருந்து உருமாறிய டெல்டா கொரோனா, அபாயகரமானதாக மாறியது. ஆனால் ஒமைக்ரானோ அதை விட வேகமாகப் பரவினாலும் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. சொல்லப்போனால் 2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களை அசால்டாக தாக்குகிறது. இருந்தாலும் பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.

இதற்கு காரணம் வைரஸ் பிறழ்வின்போது செல்களில் ஏற்பட்ட எதோ ஒரு மாற்றம் தான் ஒமைக்ரான் தீவிரத்தை அடக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. இன்னும் சிலரோ, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தியிருப்பதால் உண்டாகியுள்ள நோய் எதிர்ப்பு சக்தி ஒமைக்ரானை மட்டுப்படுத்தியுள்ளது என்கிறார்கள். இருந்தாலும் ஒமைக்ரானுக்கு எதிராக பூஸ்டர் டோஸ் போடும் பணியை பல்வேறு நாடுகள் முடுக்கிவிட்டுள்ளன. இந்தியாவிலும் இன்று முதல் இணை நோய்கள் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது.

எது எப்படியோ பூஸ்டர் டோஸ் ஒமைக்ரானுக்கு எதிராக எப்படி செயல்படுகிறது என ஆராய்ச்சி செய்வதும் அவசியமாகிறது. அந்த வகையில் 3ஆவது டோஸ் (பூஸ்டர்) கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொள்வதால் உடலில் ஆன்டிபாடி (நோய் எதிர்ப்பாற்றால்) அளவு கணிசமாக அதிகரிப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ஐசிஎம்ஆர்) தகவல் வெளியிட்டுள்ளது. அதாவது ஒமைக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வகைகளுக்கு எதிராக அதிக பாதுகாப்பை ஏற்படுத்துகிறது 3ஆவது டோஸ். மரபணு ஒப்புமை உடைய, ஒப்புமையற்ற உருமாறிய கொரோனாக்களுக்கு எதிராக அதிகளவில் ஆன்டிபாடிகளை உருவாக்குவதாஜ ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.