×

சர்ச்சை ட்வீட்... மன்னிப்பு கேட்டும் சித்தார்த்தை துரத்தும் போலீஸ் - வழக்குப்பதிந்து விசாரணை!

 

நடிகர் சித்தார்த்தின் ட்வீட்கள் எப்போதுமே பரபரப்பை ஏற்படுத்தும். மத்திய அரசையும் பாஜகவையும் மிகக் கடுமையாக விமர்சித்து ட்வீட் செய்வார். பாஜக ஆதரவாளர்களும் இந்துத்துவ ஆதரவாளர்களும் சித்தார்த்தை தகாத வார்த்தைகளால் திட்டி ட்வீட் செய்வார்கள். இது எல்லாம் வழக்கமாக நடக்கக்கூடியது தான். ஆனால் அண்மையில் அவர் போட்ட ஒரு ட்வீட் தேசியளவில் கவனம் பெற்று சர்ச்சையை ஏற்படுத்தியது. பஞ்சாப்பில் பிரதமர் பாதுகாப்பு குளறுபடி விவகாரம் பெரிதானதையடுத்து பல்வேறு தரப்பினரும் கருத்து தெரிவித்தனர்.

அந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலும் ட்வீட் செய்தார். பிரதருக்கே பாதுகாப்பு இல்லாத நாடு, பாதுகாப்பாக இருக்கிறது என பறைசாற்ற முடியாது என அவர் கூறியிருந்தார். இதனை ரிட்வீட் செய்த சித்தார்த், Shuttle Cock (இறகுப்பந்து) என்பதற்குப் பதில் Subtle Cock என பதிவிட்டு விமர்சித்திருந்தார். அதாவது நுட்பமாக பாஜகவுக்கு சாய்னா ஆதரவளிப்பதாக திட்டியிருந்தார். ஆனால் இது இரட்டை அர்த்தத்தில் பொருள் கொண்டு சாய்னாவின் கணவர் பாருபள்ளி காஷ்யப் உட்பட பல்வேறு கிரிக்கெட் வீரர்கள், அரசியல்வாதிகள் சித்தார்த்தை கடுமையாக விமர்சித்தனர்.

தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மகாராஷ்டிரா மற்றும் தமிழக டிஜிபிகளுக்கு கடிதம் எழுதியது. இதனிடையே சாய்னா நேவாலிடம் சித்தார்த் மன்னிப்பு கேட்டார். தான் அந்த அர்த்ததில் சொல்லவில்லை எனவும், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும் தெரிவித்தார். மேலும் தன்னுடைய விமர்சன கருத்துக்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் கூறினார். இதையடுத்து அவர் மன்னிப்பை ஏற்றுக்கொண்ட சாய்னா, சித்தார்த்தை கடவுள் ஆசிர்வதிப்பார் என்றார். 

இருந்தாலும் தமிழக காவல் துறை சித்தார்த் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளது. அவரை நேரில் அழைத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளது. விரைவில் சம்மன் அனுப்பப்படலாம் என தெரிகிறது. இச்சூழலில் கடப்பாவைச் சேர்ந்த இந்து ஜனா சக்தி பிரேரேனா என்பவர் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி புகாரளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், சித்தார்த் மீது ஹைதாராபாத் சைபர் க்ரைம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.