×

பிரபல வரலாற்று ஆசிரியர் மறைவு... அரசு மரியாதையுடன் நல்லடக்கம் - முதல்வர் அறிவிப்பு!

 

பிரபல வரலாற்று ஆசிரியரும் எழுத்தாளருமான பாபாசாஹேப் புரந்தரே இன்று காலமானார். அவருக்கு வயது 99. வயது மூப்பின் காரனமாக சில மாதங்களாகவே அவர் பல்வேறு உடல் உபாதைகளால் சிரமப்பட்டு வந்தார். தீவிர உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட புரந்தரே வென்டிலேட்டர் உதவியுடன் புனேவிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 5 மணிக்கு அவர் உயிர் பிரிந்தது. புரந்தரேவை கௌரவிக்கும் விதமாக மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அரசு மரியாதையுடன் அவர் உடல் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்துள்ளார். 

பல்வந்த் மொரேஷ்வர் புரந்தரே என்பதே இவரின் உண்மையான பெயர். பாபாசாஹேப் மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியைப் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் பண்டைக்கால இந்தியாவின் வரலாறு மற்றும் அது தொடர்பான ஆராய்ச்சிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தவர் பாபாசாஹேப். 2019ஆம் ஆண்டில் இந்தியாவின் 2ஆவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது இவருக்கு  வழங்கப்பட்டது. 200க்கும் மேற்பட்ட கலைஞர்களால் நிகழ்த்தப்பட்ட 'ஜண்ட ராஜா' நாடகத்தை இவரே எழுதி இயக்கினார். 


ஐந்து மொழிகளில் வெளியான இந்த நாடகம் பல்வேறு தரப்பினரின் பாராட்டைப் பெற்றது. பாபாசாஹேப் மறைவுக்கு பல்வேறு தலைவர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். பிரதமர் மோடி தனது ட்விட்டரில், "என் வேதனையை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை. புரந்தரேவின் மறைவு வரலாறு மற்றும் கலாச்சார உலகில் மிகப்பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இளைய தலைமுறையினர் சத்ரபதி சிவாஜியை அறிந்துகொள்ள செய்ததற்கு அவருக்கு நன்றி. அவரது மற்ற படைப்புகளும் என்றென்றும் நினைவுகூரப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.