×

"இனி தான் வெளுத்துவாங்க போகுது” - வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் கடவுளின் தேசம்!

 

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு  காரணமாக பெரும்பாலான மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரள மாநிலத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் பெரும்பாலான அணைகள் வேகமாக நிரம்பிவருகின்றன. எப்போது வேண்டுமானாலும் வெள்ளம் ஏற்படும் என்பதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்குமாறு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது. தொடர் மழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

முக்கிய சாலைகளில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.  கன மழையால் கோட்டயம் மாவட்டத்தில் நேற்று பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் அப்பகுதியில் 3 வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளுக்குள் சிக்கி மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு வந்த பேரிடர் மீட்புப் படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்ட பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.  இடுக்கி மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி மேலும் 2 பேர் உயிரிழந்தனர். காணாமல் போன பலரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. 

இதோடு மழை பாதிப்புகள் நின்றுவிடும் என்று நினைத்திருந்த நிலையில், மேலும் சில நாட்களுக்கு கேரளாவில் கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பத்தனம்திட்டா, கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திருச்சூர் ஆகிய 5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதேபோல, திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு ஆகிய 7 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட கடவுளின் தேசத்தின் தலையில் இறங்கியது போல மழை பாதிப்புகள் அமைந்துள்ளன.